ஆஸ்திரேலியாவில் உள்ள காபா மைதானமும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உகந்த மைதானம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து நம் மின்னம்பலத்தில், ’ராவல்பிண்டி மைதானம்: அபாய நிலைக்குத் தள்ளி ஐசிசி’ என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி விரிவாக கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள காபா மைதானமும் டெஸ்ட் போட்டியை நடத்த ஏதுவான மைதானம் கிடையாது என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் ஏல்கர், “கிரிக்கெட் வீரர்களுக்கு காபா மைதானம் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது என்று நான் நடுவர்களிடம் பேசினேன். இது போன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களால் எதுவும் செய்ய முடியாது. பழைய பந்துகள்கூட இங்கு நன்றாக பவுன்ஸ் ஆகி வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதுபோன்ற மைதானங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் அது பார்வையாளர்களுக்கும் சலிப்பை உண்டாக்கும். ஒன்றரை நாட்களிலேயே 34 விக்கெட்டுகள் விழுந்தது அதிர்ச்சியாக இருக்கிறது. போட்டி ஆரம்பித்த உடனே முடிந்துவிட்டது. இந்த இரண்டு நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது மாதிரியான ஆடுகளத்தை நான் பார்த்ததே கிடையாது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்த மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 152 ரன்களை குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 218 ரன்கள் குவித்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களில் சுருண்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி கடைசி இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 35 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டி தொடங்கி ஒன்றரை நாளிலேயே 34 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு போட்டி முடிவுக்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனாலேயே தற்போது இந்த மைதானத்துக்கும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஜெ.பிரகாஷ்
எம்ஜிஆர் – ஜெயலலிதா மட்டுமே ஏழைகளுக்காக வாழ்ந்தவர்கள்: எடப்பாடி அண்ணாமலை வாட்ச்: உண்மையிலேயே ரஃபேல் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டதா?