2023 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, நேற்று (அக்டோபர் 5) பிரம்மாண்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, 2019 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.
கேன் வில்லியம்சன், டிம் சவுதி, லாக்கி பெர்குசன் போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இல்லாத போதும், நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, இமாலய வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரரான தேவன் கான்வே 152 (121) ரன்களும், முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 123 (96) ரன்களும் சேர்த்து, ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்மூலம், ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே பல சாதனைகள் இந்த ஜோடி படைத்துள்ளது.
1) 2வது விக்கெட்டிற்கு 273 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி, ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளது.
2) மேலும், ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில், அதிக ரன்கள் சேர்த்த இணை பட்டியலில், கிறிஸ் கெய்ல் – மார்லன் சாமுவேல்ஸ் (372 ரன்கள்), ராகுல் டிராவிட் – சவுரவ் கங்குலி (318 ரன்கள்), திலகரத்னே தில்ஷன் – உபல் தரங்கா (282 ரன்கள்) ஆகியோருக்கு அடுத்து 4வது இடத்தை பிடித்துள்ளது.
3) மேலும், ஒருநாள் உலகக்கோப்பையின் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து, விராட் கோலி, கேரி கிரிஸ்டின், அன்ட்ரூ சைமண்ட்ஸ் உள்ளிட்ட ஜாம்பவான்களுடன், ‘அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த வீரர்கள்’ பட்டியலில், தேவன் கான்வே, ரச்சின் ரவீந்திராவும் இணைந்துள்ளனர்.
4) ஒருநாள் உலகக்கோப்பையின் அறிமுக போட்டியில், மிக குறைந்த வயதில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், விராட் கோலி, ஆண்டி ஃபளார் ஆகியோருக்கு அடுத்து, ரச்சின் ரவீந்திரா 3வது இடம் பிடித்துள்ளார்.
5) அதேபோல, ஒருநாள் உலகக்கோப்பையின் அறிமுக போட்டியில், மிக அதிக வயதில் சதம் அடித்க வீரர்கள் பட்டியலில், ஜெர்மி பிரேவுக்கு அடுத்து கான்வே 2ம் இடம் பிடித்துள்ளார்.
6) நியூசிலாந்து அணிக்காக, ஒருநாள் போட்டிகளில் மிகக்குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில், தேவன் கான்வே முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 1000 ரன்களை கடக்க 22 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார்.
7) மேலும், உலகக்கோப்பை போட்டிகளில், வெற்றிகரமாக இலக்கை எட்டிய ஆட்டங்களில், அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 152 ரன்களுடன் கான்வே முதலிடத்தை பிடித்துள்ளார்.
8) இது மட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளில் அனைத்து 11 வீரர்களுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தது இதுவே முதல்முறை என்ற வரலாற்றை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.
‘ரச்சின்’ பெயர் காரணம் என்ன தெரியுமா?
ரச்சின் ரவீந்திரா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாய் தீபா கிருஷ்ணமூர்த்தி, 90களில் பெங்களூருவில் இருந்து நியூசிலாந்தின் தலைநகரான வெல்லிங்டனுக்கு இடம் பெயர்ந்தனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் மிகத் தீவிர ரசிகர்களாக இருந்த இவர்கள், அவர்கள் இருவரின் பெயரை இணைத்து, தங்களது மகனுக்கு ரச்சின் என பெயர் சூட்டினர்.
அதாவது, ராகுல் டிராவிட் பெயரில் இருந்து ‘ரா’ மற்றும் சச்சின் டெண்டுல்கர் பெயரில் இருந்து ‘ச்சின்’ ஆகிய பாகங்களை எடுத்து, தங்களது மகனுக்கு ரச்சின் என பெயர் சூட்டினர்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லியோ டிரைலர்: சன் தொலைக்காட்சி யூடியூப் பக்கத்தில் வெளியானது ஏன்?
அஜித்தின் “விடாமுயற்சி” ஷூட்டிங் தொடங்கியது!