அடுத்தடுத்து அதிவேக அரைசதங்கள்.. RCB சாதனையை முறியடித்த SRH..!

Published On:

| By Kavi

SRH vs MI: 2024 ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இப்போட்டியில், 2 மாற்றங்களை மேற்கொண்ட ஐதராபாத் அணி, மார்கோ ஜான்சனுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட்டை களமிறங்கியது.

டாஸிற்கு பிறகு, ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் & மயன்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். 2023 உலகக்கோப்பையில் விட்டு சென்ற இடத்தில் இருந்த இந்த போட்டியை துவங்கினார் டிராவிஸ் ஹெட். பவர்-பிளேவில் சந்தித்த பந்துகள் மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் பறக்கவிட்டார்.

அவரின் இந்த அதிரடியால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பவர்-பிளே முடிவில் 81 ரன்களை குவித்தது. 18 பந்துகளில் அரைசதம் கடந்த டிராவிஸ் ஹெட், இந்த தொடரின் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார்.

டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த அபிஷேக் சர்மாவும் இந்த அதிரடி ஆட்டத்தை சற்றும் கூட குறையாமல் பார்த்துக்கொண்டார். இதன்மூலம், 10 ஓவர்களிலேயே ஐதராபாத் அணி 148 ரன்களை குவித்தது.

வெறும் 16 பந்துகளில் அரைசதத்தை கடந்த அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட்டின் சாதனையை சிறிது நேரத்தில் முறியடித்து, இந்த தொடரின் அதிவேக சதத்தை பதிவு செய்தார்.

அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த ஹெய்ன்ரிச் கிளாசன் மற்றும் எய்டன் மார்க்ரம், தங்கள் பங்கிற்கு பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டனர்.

இதன் காரணமாக, ஐதராபாத் அணி 14.4 ஓவர்களிலேயே 200 ரன்களை எட்டியது. மேலும், அதிவேகமாக 200 ரன்களை எட்டிய அணிகள் பட்டியலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (14.1) அணிக்கு அடுத்து 2வது இடம் பிடித்தது.

தொடர்ந்து ஹெய்ன்ரிச் கிளாசன் சிக்ஸர் மழை பொழிந்து, 34 பந்துகளில் 80 ரன்கள் விளாச, ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 277 ரன்களை குவித்தது.

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில், ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெற்றுள்ளது. முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 263 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– மகிழ்

“இளையராஜா படத்தில் நான் இருப்பேன்” – பாரதிராஜா வைரல் வீடியோ!

தோனி, கோலியுடன் புதிய சாதனை பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel