காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கம் உறுதி!

Published On:

| By Prakash

காமன்வெல்த் லான் பவுல்ஸ் (lawn bowls) போட்டியில் இந்திய அணி முதல்முறையாக தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 72 நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ள இந்தப் போட்டியில் இந்தியாவும் பல பிரிவுகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது.

இந்தியா சார்பில் இதுவரை 3தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி 16-13 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. லவ்லி சௌபே , பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி அடங்கிய இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றனர்.

இதன்மூலம் காமன்வெல்த் தொடரில் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

இந்திய அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த விளையாட்டில் இந்திய அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததையடுத்து, அவ்வணி வீராங்கனைகள் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேபோல், இன்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை சுஷிலா தேவி, தென்னாப்பிரிக்க வீராங்கனை மைக்கேலாவை எதிர்கொண்டார். 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் மைக்கேலாவை வீழ்த்தி, இந்திய வீராங்கனை சுஷிலா தேவி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
குறிப்பாக, இன்று மட்டும் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.


ஜெ.பிரகாஷ்

பெட்ரோல்-டீசல்-ஜிஎஸ்டி: நிர்மலாவுக்கு பிடிஆர் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share