காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி, இன்று (ஆகஸ்ட் 2) இரண்டு தங்கப் பதக்கங்களை உச்சி முகர்ந்தது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 72 நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ள இந்தப் போட்டியில் இந்தியாவும் பல பிரிவுகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) பிற்பகல் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.05 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 2) மாலை நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி சிங்கப்பூர் அணியுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 10-12, 11-7, 7-11, 4-11 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. சத்யன் ஞானசேகரனின் சிறப்பான ஆட்டமே இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வழிவகுக்கக் கொடுத்தது.
அதேபோல், நேற்று (ஆகஸ்ட் 1) லான் பவுல்ஸ் பிரிவில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்று வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி, இன்று (ஆகஸ்ட் 2) தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 17-10 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
காமன்வெல்த்தில் லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய அணி வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். மொத்தத்தில், இதுவரை, இந்தியா அணி காமன்வெல்த் போட்டியில் 5 தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறது.
ஜெ.பிரகாஷ்