அடுத்த ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் தொடரில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி மற்றும் மல்யுத்தம் உள்ளிட்ட 9 முக்கிய போட்டிகள் நீக்கப்பட்டுள்ளதாக காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு இன்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.
இந்தியா வீரர் வீராங்கனைகள் அதிகளவில் பதக்கம் வெல்லும் சர்வதேச விளையாட்டு தொடராக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் போட்டி கருதப்படுகிறது.
அதன்படி அடுத்த ஆண்டு ஜூலை 23 முதல்ஆகஸ்ட் 2 வரை ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கிளாஸ்கோ காமன்வெல்த் தொடரில் இருந்து 9 முக்கிய போட்டிகள் நீக்கப்பட்டுள்ளதாக காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு (CGF) இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஹாக்கி, பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், சாலைப் பந்தயம் ஆகிய போட்டிகள் நிதி பற்றாக்குறை காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக சிஜிஎஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் அறிவிப்பால் இந்திய வீரர்களும், விளையாட்டு கூட்டமைப்பு சங்கத்தினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் 179 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா அணி முதலிடமும், 176 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடமும் பிடித்தன.
61 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடம் பெற்றது. அதிகபட்சமாக மல்யுத்தத்தில் 10 பதக்கங்களும், பளு தூக்குதலில் 12 பதக்கங்களையும், தடகளத்தில் 8, டேபிள் டென்னிஸ் மற்றும் குத்துச்சண்டையில் தலா 7 பதக்கங்களையும் இந்திய வீரர்கள் வென்றனர்.
இந்த நிலையில் இந்தியா வீரர்கள் அதிக பதக்கம் வெல்லும் போட்டிகளான ஹாக்கி, பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் போட்டிகள் நீக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“ரூ.411 கோடி அரசு நிலத்தை அபகரித்த ராஜகண்ணப்பன்” : அறப்போர் இயக்கம்!