72 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டி இன்று தொடங்குகிறது!
இங்கிலாந்தில் 72 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று (ஜூலை 28) இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்குகிறது. தொடக்க விழாவில் இந்திய அணிக்கு தேசிய கொடியை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஏந்தி செல்கிறார்.
இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. 1930ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் இன்று (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்த 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இங்கிலாந்து, வங்காள தேசம், ஜமைக்கா, மலேசியா, நைஜீரியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, கென்யா, ஸ்காட்லாந்து உள்பட 72 நாடுகளைச் சேர்ந்த 5,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
18ஆவது முறையாக இந்தப் போட்டியில் கால்பதிக்க இருக்கும் இந்தியா இதுவரை 181 தங்கம் உட்பட 503 பதக்கங்கள் வென்று காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. 2002ஆம் ஆண்டில் 69 பதக்கங்களும், 2006ஆம் ஆண்டில் 50 பதக்கங்களும், 2010ஆம் ஆண்டில் 101 பதக்கங்களும், 2014ஆம் ஆண்டில் 64 பதக்கங்களும், 2018ஆம் ஆண்டில் 66 பதக்கங்களும் இந்தியா வென்று இருக்கிறது.
இந்த ஆண்டு டி20 பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளில் இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணியினர் வழக்கம் போல் குத்துச்சண்டை, பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றில் அதிக பதக்கங்கள் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தலைமை தாங்க இருந்த நீரஜ் சோப்ரா விலகியதால் அவருக்கு பதிலாக ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று (ஜூலை 27) அறிவித்தது.
தொடக்க விழா அணி வகுப்புக்குக்கான இந்திய அணியில் 164 வீரர், வீராங்கனைகள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு கோஸ்டுகோஸ்டில் (ஆஸ்திரேலியா) நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணிக்கு சிந்து தான் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
– ராஜ்