காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து நிறைவு செய்துள்ளது.
72 நாடுகள் பங்கேற்ற 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. கடந்த மாதம் 28ஆம் தேதி மிக பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இந்த தொடர் இன்று (ஆகஸ்ட் 9) நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. நேற்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றன.
விளையாட்டு போட்டிகளின் இறுதி நாளான நேற்று இந்தியா தனது அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது. குறிப்பாக நேற்று பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அசத்தியது. இறுதி நாளான நேற்று பி.வி.சிந்து மற்றும் இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடந்த பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். அதேபோல் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். இதனால் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
இறுதியாக நடைபெற்ற ஆடவர் ஆக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கத்தை வென்றது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் கடைசி பதக்கமாக இது அமைந்தது.
இறுதியாக இந்தியா மொத்தமாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் கனடா 92 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில் காமன்வெல்த் போட்டிகள் நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச்செல்லும் வீரர்களாக டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காமன்வெல்த் தொடரில் ஷரத் கமல் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், நிகாத் ஜரீன் குத்துச்சண்டையிலும் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
கடைசி டி20: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்திய அணி!