பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலுக்கு செய்தது மிகப்பெரிய தவறு என்றும், அதிரடி வீரரான அவரை பெரிய தொகை கொடுத்து எடுக்க வேண்டும் எனவும் கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான, மினி ஏலம் இன்று(டிசம்பர் 23) கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது.
மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து உள்ளனர். அவர்களில் 741 பேர் இந்தியர்கள் ஆவர். அவர்களோடு, ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த ஏலத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக 10 அணிகளும் தங்களது கடைசிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த முறை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அடுத்தபடியாக அதிகபட்ச தொகையை கையில் வைத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. அந்த அணி 9 வீரர்களை கழட்டிவிட்டு ரூ. 32. 2 கோடி யை கையில் வைத்துள்ளது.
பஞ்சாப் அணி கழட்டிவிட்டதிலேயே மிகவும் அதிர்ச்சி கொடுத்த விஷயம் கேப்டன் மயங்க் அகர்வாலை நீக்கியது தான். 2018 ஆம் ஆண்டில் இருந்து பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் மயங்க் அகர்வால் கடந்தாண்டு கே.எல்.ராகுல் வெளியேறிய பிறகு புதிய கேப்டனாக பொறுப்பேற்றார்.
காம்பினேஷன் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக தவான் – பேரிஸ்டோவை ஓப்பனிங்கிற்கு வைத்துவிட்டு, தன்னை மிடில் ஆர்டரில் வைத்துக்கொண்டார். எனினும் அந்த அணி 6-வது இடத்தையே பிடித்தது.
இந்நிலையில்,மயாங்க் குறித்து கிறிஸ் கெயில் வேதனை தெரிவித்துள்ளார். தனியார் செய்திநிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”அதிரடி வீரரான மயங்கிற்கு பெரிய தொகை கொடுத்து எடுக்க வேண்டும். அப்படி அவர் வாங்கப்படவில்லை என்றால் பெரும் ஏமாற்றம்.
பஞ்சாப் அணிக்காக அவ்வளவு செய்தும், தக்கவைக்கப்படவில்லை என்பதால் ஏற்கனவே அவர் வேதனையில் இருக்கிறார். அதுவும் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்.
பஞ்சாப் அணி மயங்கிற்கு செய்தது மிகப்பெரிய தவறாகும். எனினும் மற்ற அணிகள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் என நம்புகிறேன். அடிக்கடி வீரர்களை நீக்குவது மாற்றுவது என செய்தால் எப்படி டாப் 4ல் வர முடியும். ஒரு நிலையான ப்ளேயிங் 11-யே இல்லாத போது எப்படி கோப்பையை வெல்ல முடியும். அந்த தவறை தான் தற்போது பஞ்சாப் அணி செய்து வருகிறது.
ஐபிஎல்-ல் விளையாடுவது என்பது மிகவும் அழுத்தமானது. அதில் எப்போது வாய்ப்பு போகும் என என்ற பதற்றத்தில் இருப்பது கூடுதல் அழுத்தத்தை தரும். இதனால் நன்றாக விளையாடும் வீரர்கள் கூட சொதப்புவதற்கு வழி வகுக்கலாம். எனவே முதலில் பஞ்சாப் அணி இதனை மாற்ற வேண்டும் என கிறிஸ் கெயில் அறிவுரை கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்