இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை யாருக்குமே பிடிக்காது என்பதால் தான் அவரை கேப்டன்சியில் இருந்து நீக்கினோம் என இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவை பிசிசிஐ நீக்கியது. அதே நேரம் சேத்தன் சர்மா மட்டும் மீண்டும் தலைவராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதனால் கிரிக்கெட் வட்டாரத்தில் அன்று முதல் சேத்தன் சர்மாவுக்கு பிசிசிஐ ஏன் இவ்வளவு சலுகைகள் வழங்குகிறது என்று கேள்வியும் , விவாதங்களும் எழுந்தது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியன. அது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய அணியில் விராட் கோலி கேப்டன்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டது எவ்வளவு பெரிய பிரச்சினையாக வெடித்தது என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், கேப்டன்சி பதவி சென்றதற்கு கங்குலி தான் காரணம் என விராட் கோலி ஒருபுறம் குற்றச்சாட்டு வைத்தார். மற்றொருபுறம் விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியும் கோலி கேட்கவில்லை என் கங்குலி ஒருபுறமும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டனர்.
இந்நிலையில், விராட் கோலி பதவி விலகுவதாக கூறிய போது, அந்த இடத்தில் 9 அதிகாரிகள் இருந்தோம். அப்போது கங்குலி மறுபரிசீலனை செய்யுமாறு கூறியது உண்மை தான். ஆனால் அதனை கோலி கேட்கவில்லை என நினைக்கிறேன் .
முன்பே கூறியதை போல அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்ததால் இதுபோன்ற விஷயங்கள் நடந்துவிட்டன. இந்த விவகாரத்தை கோலி பத்திரிகைகளில் தெரிவிக்க நினைத்து, தனக்கு தானே கெட்ட பெயரை பெற்றுக்கொண்டார்.
உண்மையை சொல்லப்போனால் ரோகித் சர்மாவுக்கு இங்கு யாரும் ஒருதலைபட்சமாக நிற்கவில்லை. ஆனால் பிசிசிஐ-ல் கங்குலி உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு விராட் கோலியை பிடிக்காது. எனவே அதற்காக விராட் கோலியின் மோசமான ஃபார்மை பயன்படுத்தி கேப்டன்சியில் இருந்து நீக்கினார்கள். இது மிகவும் கேவலமான ஒன்று என சேத்தன் சர்மா கூறியுள்ளார்.
மேலும், ஒரு வீரர் பிரபலமான வீரராக மாறும் போது அவர்கள் கிரிக்கெட் வாரியத்தை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கருத தொடங்குகின்றனர். அவரை யாரும் தொட முடியாது என்று நினைக்கிறார். அவர் இல்லாமல் இந்தியாவில் கிரிக்கெட் நின்றுவிடும் என்று உணர்கிறார்.
ஆனால் அது எப்போதாவது நடந்ததா ? என்று கேள்வியெழுப்பினார்.
கிரிக்கெட்டில் சில ஜாம்பவான்கள் வந்தார்கள், போனார்கள் ஆனால் கிரிக்கெட் அப்படியே தான் இருக்கிறது என்றார்.
விராட் கோலி சிறந்த பார்ம்-ல் இல்லாத போது அவருக்கு துணையாக இருந்தவர் ரோகித் சர்மா தான், அதேபோல் ரோகித் சில நேரங்களில் நெருக்கடியில் சிக்கும் போது அவருக்கு விராட் கோலி ஆதரவாக இருந்துள்ளார் என்று சேத்தன் சர்மா கூறினார் .
80 முதல் 85 சதவீதம் உடற்தகுதியுடன் இருந்தாலும் போட்டிக்கு திரும்பும் போது வீரர்கள் ஊசியை பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரம் தேர்வுக்குழுவில் இருப்பவர்கள் ஊடகங்களில் இது போன்ற விசயங்களை பகிர்ந்து கொள்ள கூடது என்பதால் பிசிசிஐ சேத்தன் சர்மாவை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“மலையேற முதலில் மலை வேண்டும்”- இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்
CUET நுழைவுத் தேர்வு: கொரோனா பாஸ் மாணவர்களுக்கு விலக்கு!