44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 8) நடைபெற்ற 10வது சுற்றுப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிபெற்றார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.
நேற்றைய (ஆகஸ்ட் 7) தரவரிசைப் பட்டியல்படி, இந்தியா ஏ அணி 5வது இடத்திலும், இந்தியா பி அணி 2வது இடத்திலும், இந்தியா சி அணி 23வது இடத்திலும் உள்ளன. மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி 2வது இடத்திலும், இந்தியா பி அணி 10வது இடத்திலும், இந்தியா சி அணி 16வது இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) நடைபெற்ற 10வது சுற்றுப் போட்டியில் ஓபன் பிரிவில், இந்தியா ஏ அணி ஈரானையும், இந்தியா பி அணி உஸ்பெகிஸ்தான் அணியையும், இந்தியா சி அணி ஸ்லோவேக்கியா அணியையும் எதிர்கொண்டன. மகளிர் பிரிவில், இந்தியா ஏ அணி கஜகஸ்தான் அணியையும், இந்தியா பி அணி நெதர்லாந்து அணியையும், இந்தியா சி அணி, ஸ்வீடன் அணியையும் எதிர்கொண்டன.
இதையடுத்து, மகளிர் பிரிவில் கஜகஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்கிய இந்திய ஏ அணியின் வீராங்கனை தானியா சச்தேவ் எதிரணி வீராங்கனையை வீழ்த்தினார். வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய அவர், 31வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இந்திய ஓபன் சி பிரிவில் களமிறங்கி கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய அபிமன்யு புரானிக் தனது 45வது நகர்த்தலில், ஸ்லோவேக்கியா அணி வீரரை வீழ்த்தினார். அதுபோல், கஜகஸ்தானுக்கு எதிரான போட்டியில் கறுப்பு நிறக் காய்களுடன் களமிறங்கிய இந்திய ஏ அணி வீராங்கனை குல்கர்னி வெற்றிபெற்றார்.
இந்திய பி அணியில் வெள்ளைநிறக் காய்களுடன் களமிறங்கிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் வீரர் சிந்த்ரோவை, 77வது நகர்த்தலில் வீழ்த்தினார்.
இது ஒருபுறமிருக்க மறுபுறம், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற அனைத்து நாட்டு வீரர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி தொல்லியல் ஆய்வு மற்றும் திருக்குறள் ஆகிய நூல்களின் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.
ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவுபெற இருக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கணைகள், நடுவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
காமன்வெல்த் ஹாக்கி: வெள்ளி வென்ற இந்தியா