“எல்லா விளையாட்டுப் போட்டிகளிலிருந்தும் பாகிஸ்தான் ஓடிக் கொண்டிருக்கிறது” என மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 செஸ் வீரர்கள், நேற்று (ஜூலை 28) காலை புனாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில், அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களிலேயே அவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், இன்று (ஜூலை 29) மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குருடன் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் சர்வதேச சதுரங்க சங்கத்தின் தலைவர் ஆர்க்காடி வோர்கோவிச் ஆகியோர் இணைந்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுராக் தாக்குர் , “பாகிஸ்தான் நாட்டு செஸ் வீரர்கள் தங்கள் நாட்டுக்குப் போயிருக்கக்கூடாது. அவர்கள் வந்து விளையாட வேண்டும். எல்லா போட்டியிலிருந்தும் பாகிஸ்தான் இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. செஸ் போட்டியில் அவர்களுக்கு வேறு வழி தெரியாமல் இப்படி செய்துவிட்டனர்” என்றார்.
ஜெ.பிரகாஷ்