செஸ் ஒலிம்பியாட் : அமைச்சர்கள் மாரத்தான்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் முதன்முறையாக வரும் ஜூன் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது.

இவ்விழாவில் பங்கேற்கும் வீரர்கள் நேற்று முதலே சென்னை வரத் தொடங்கியுள்ளனர். முதல் அணியாக ஆப்பிரிக்க கண்டம் மடகாஸ்கர் தீவை சேர்ந்த வீரர்கள் ஆன்ட்ரியனியனா, ஹெரிடியனோ, டொவினா, சார்லி மகானிகஜா ராஜெரிசன், ராகோடாமகரோ, ராமலன்சனோ ஆகியோர் வந்தனர். தொடர்ந்து ஹங்கேரி, ஜாம்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த 2 வீரர்கள் வந்தனர்.

இன்று உஸ்பெகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வருகை தரவுள்ளனர்.


இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கும் பிரம்மாண்ட அரங்கில் நேற்று இந்தியாவைச் சேர்ந்த நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் 90 பேர் டிஜிட்டல் செஸ்போர்டுகள் எப்படிச் செயல்படுகிறது என்று சோதித்துப் பார்த்தனர்.

இந்நிலையில் இன்று செஸ் ஒலிம்பியாட் ஒத்திகை போட்டி தொடங்கியிருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டனர்.

விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர். நேப்பியார் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான மாரத்தானில் ஏராளமான மாணவ மாணவிகளுடன் அமைச்சர்களும் சென்னை மேயர் பிரியாவும் பங்கேற்றனர்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel