ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடந்து வரும் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓபன் பிரிவில் இந்திய ஆடவர் அணி முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
செஸ் விளையாட்டு உலகில் முக்கிய தொடராக செஸ் ஒலிம்பியாட் கருதப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி வெண்கலம் வென்றிருந்தது.
அதனைத்தொடர்ந்து 45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் கடந்த 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
கடந்த இரண்டு வாரங்களாக 11 சுற்றுகளாக நடைபெற்று வந்த இந்த தொடரில் இந்திய ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தன.
மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட போட்டியில் ஆடவர் (ஓபன்) 10வது சுற்றில் இந்தியா ஆடவர் அணி, நம்பர் 1 அமெரிக்காவுடன் மோதியது. இதில் 2.5-1.5 என்ற கணக்கில் இந்திய ஆடவர் அணி வென்றது.
இந்தியாவின் அர்ஜூன் எரிகாசி, அமெரிக்காவின் லெனியர் டோமின்குயிசை வென்றார். குகேஷ் உலக நம்பர் 3 வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தினார். வெஸ்லி சோவிடம் பிரக்னாநந்தா தோல்வியை சந்தித்தார். லெவன் அரோனியனுக்கு எதிராக விடித் குஜராத்தி டிரா செய்தார்.
தொடர்ந்து பதக்கத்தை முடிவு செய்யும் 11வது மற்றும் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்தியாவும், 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்த ஸ்லோவேனியாவும் மோதின.
அதன் பரபரப்பாக நடந்த ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி டிரா செய்தது. இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட் செஸ் வரலாற்றில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இதே போன்று மகளிருக்கான 10வது சுற்றில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் சீனாவை வெற்றி பெற்றது. இதன்மூலம் மகளிர் பிரிவில் மீண்டும் முதலிடம் வந்துள்ள இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் அஜர்பைஜானையும் எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் வென்று மகளிர் அணியும் தங்கப்பதக்கத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வரலாற்று வெற்றி: இலங்கையின் 9வது அதிபராகிறார் அநுர குமார திஸாநாயக்க
”திருடப்படும் வேள்பாரி காட்சிகள்”: இயக்குநர் ஷங்கர் கடும் எச்சரிக்கை!