2022 செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம், வெண்கலம், ஓபன் பிரிவில் வெண்கலம், மகளிர் பிரிவில் வெண்கலம், ஓபன் தனிநபர் பிரிவில் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம், மகளிர் தனிநபர் பிரிவில் 3 வெண்கலம் என இந்தியா பதக்கங்களை குவிந்திருந்தது.
இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட்டில் நடைபெறும் 45வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிகள் களமிறங்கின.
ஓபன் பிரிவில் அர்ஜுன் எரிகைசி, டி குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அணி களமிறங்கியது. மகளிர் பிரிவில், ஹரிகா துரோனவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வன்டிகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது.
மொத்தம் 11 சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்த தொடரின் முதல் சுற்றில், ஓபன் பிரிவில் இந்தியா மொராக்கோ அணியை எதிர்கொண்டது. மகளிர் பிரிவில் இந்தியா – ஜமைக்கா அணிகள் மோதின.
ஓபன் பிரிவின் முதல் சுற்றின் ஆட்டத்தில், இந்தியா சார்பில் 4 போர்டுகளில் முறையே பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் களமிறங்கினர்.
இந்த சுற்றில், எதிரணிக்கு துளியும் கூட வாய்ப்பு வழங்காத இந்திய வீரர்கள் 4 போர்டுகளிலும் வெற்றி பெற்று, 4-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
மறுபுறத்தில், மகளிர் பிரிவில், 4 போர்டுகளில் முறையே வைஷாலி, திவ்யா தேஷ்முக், வன்டிகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் விளையாடினர்.
இவர்களில், வைஷாலி, வன்டிகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் எதிரணி வீராங்கனைகள் வீழ்த்தி வெற்றி பெற்றனர். திவ்யா தேஷ்முக் மட்டும் போட்டியை சமன் செய்தார். இதன்மூலம், மகளிர் பிரிவிலும் 3.5-0.5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியுடன் தொடரை துவங்கியுள்ளது.
இந்த வெற்றிகளின் மூலம், 2 அணிகளுமே தங்கள் பிரிவுகளில் தலா 2 புள்ளிகளை பெற்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
கவலையைக் கரைக்கும் வடிவேலு ‘காமெடி’கள்!
இரவு 10 மணிக்கு மேல்… போக்குவரத்து கழக முடிவால் மக்கள் குஷி!