கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு!

விளையாட்டு

இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை, தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (ஜூலை 23) தன் வீட்டுக்கு நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

செஸ் உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்து சரித்திர சாதனை படைத்தவர், சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா. சென்னையில் ஆகஸ்ட் 10, 2005 அன்று பிறந்த பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டை அறிமுகம் செய்து வைத்தது அவரது அக்கா வைஷாலிதான். அவரும் செஸ் வீராங்கனை. தன் தம்பியுடன் செஸ் ஒலிம்பியாட் தொடரில் வைஷாலியும் பங்கேற்க இருக்கிறார்.
5 வயதில் போட்டிகளில் களமிறங்கி, தனது ஏழாவது வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வசப்படுத்தியவர் பிரக்ஞானந்தா. கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பன்னிரண்டு வயதில் வென்றார். இப்படி, தொடர்ந்து பல செஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வரும் பிரக்ஞானந்தா, ஜூலை 28ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரில், இந்தியா சார்பில் ’பி’ பிரிவில் பங்கேற்க இருக்கிறார்.

இந்த நிலையில், பிரக்ஞானந்தா இன்று தனது குடும்பத்தினருடன் சென்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். செஸ் தொடர்களில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் பிரக்ஞானந்தாவை வியந்து பாராட்டிய ரஜினி, அடுத்ததாக நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரிலும் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தினார்.

பரிசு கொடுத்த ரஜினி

இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரக்ஞானந்தா, “மறக்க முடியாத நாள். இன்று ரஜினி அங்கிளை எனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்தேன். இவ்வளவு உயரங்கள் சென்றும் அவர் மிகவும் எளிமையாக இருப்பது என்னை ஈர்த்தது. மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார். செஸ் போர்டு ஒன்றையும், ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றையும் பிரக்ஞானந்தாவிற்கு நினைவுப் பரிசாக வழங்கினார் ரஜினி.
முன்னதாக, (ஜூலை 20) முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் நடித்த செஸ் ஒலிம்பியாட் விளம்பர படம் எடுக்கப்பட்ட சென்னை நேப்பியார் பாலத்தில் அவர் தன் தங்கையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படத்தை பிரக்ஞானந்தா பகிர்ந்த சில மணி நேரங்களில், ‘செஸ் ஒலிம்பியாட் விளம்பரப் படத்தில் முதல்வரும், இசைப்புயலும் நடித்ததற்குப் பதில், நம் தமிழகத்தின் செஸ் சாம்பியன்களை நடிக்க வைத்திருக்கலாம் என்ற பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்த நிலையில்தான், ரஜினிகாந்த் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *