சேப்பாக்கம் சிஎஸ்கே வின் கோட்டை…தோனிக்கு சிறப்பான ஆண்டு…ஆஸ்திரேலிய வீரர் ஹெய்டன்

Published On:

| By Jegadeesh

எம்.எஸ். தோனிக்கு இந்த ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவில் கொண்டாடப்படும் ஆண்டாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ் தோனி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் அந்த அணிக்கு இதுவரை 4 கோப்பைகளை பெற்றுத்தந்திருக்கிறார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹெய்டன் எம்.எஸ். தோனிக்கு இந்த ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவில் கொண்டாடப்படும் ஆண்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய ஹெய்டன், ” சிஎஸ்கே அணி தனித்துவமான மற்றும் சிறப்பான ஆட்டத்தை இந்த முறை வெளிப்படுத்தும். இரண்டு வருடங்களாக அந்த அணி விளையாடாதது துரதிர்ஷ்டவசமானது. சேப்பாக்கம் என்பது சென்னை அணியின் கோட்டை” என்றார்.

மேலும், ”அந்த அணி தங்களை புதுப்பித்து கொள்ள முற்றிலும் மாறுபட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த ஒரு வழி உள்ளது. சில வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களின் பெரும்பாலான வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டது சிஎஸ்கே அணிக்கு சிறந்ததாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் “ எம்.எஸ்.தோனியைப் பொறுத்தவரை, குறிப்பாக இந்த ஆண்டு, வேறு எந்த ஆண்டும் இல்லாத வகையில் கொண்டாடப்படும் ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். தோனியை நான் நம்புகிறேன், மேலும் அவர் தனது ரசிகர்களுடன் ஸ்டைலாக வெளியே செல்ல விரும்புவார், அவர் ஸ்டைலாக வெளியேற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. இதனிடையே தோனியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆன்லைன் தடை சட்ட மசோதா: ஆளுநருக்கு அப்பாவு கேள்வி!

போலி வீடியோக்களை தோலுரித்த ஜுபைருக்கு கொலை மிரட்டல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel