லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று (ஏப்ரல் 3) நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.
சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் முதல்முறையாக சென்னை அணி ஆடியதால் இந்த போட்டி குறித்து ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.
ஆரம்பம் அட்டகாசம்!
இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி பேட்டிங்கில் இறங்கியதால் 8வது ஓவரிலேயே சென்னை அணி 100 ரன்களை கடந்தது.
தொடர்ந்து அரைசதத்துடன் 31 பந்துகளில் 57 ரன்களை கடந்த ருத்துராஜ் விக்கெட்டை ரவி பிஷ்னோய் கைப்பற்றினார். அதற்கு அடுத்த ஓவரிலேயே 47 ரன்களில் கான்வேவும் ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
5000 ரன்களை கடந்தார் தோனி
அடுத்த வந்த வீரர்கள் ஷிவம் துபே(27), மொயின் அலி(19), பென்ஸ்டோக்ஸ்(8), ஜடேஜா (3) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
எனினும் கடைசி கட்ட ஓவர்களில் அம்பதி ராயுடு சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட அணியின் ஸ்கோர் ஜெட்டாக உயர்ந்தது.
அவருக்கு உறுதுணையாக ஆடிய ஜடேஜா அவுட் ஆன பின் களம் கண்ட கேப்டன் தோனியும் வந்த வேகத்தில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 3வது பந்தில் அவரது சிக்ஸர் அடிக்கும் முயற்சி கேட்ச் ஆக மாறியதால் ஆட்டமிழந்தார். எனினும் இந்தப்போட்டியில் 12 ரன்களை எடுத்ததன் மூலம் தோனி ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்தார்.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை குவித்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் அம்பதி ராயுடு 27 ரன்களுடனும், மிட்ஷெல் சாட்னர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னோய், மார்க் உட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அச்சுறுத்திய கைல் மேயர்ஸ்
தொடர்ந்து ஆடிய லக்னோ அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் (20) மற்றும் கைல் மேயர்ஸ்(53) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் குவித்தனர்.

அதிலும் சென்னை அணி பவுலர்களை அச்சுறுத்திய கைல் மேயர்ஸ் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய தேஷ் பாண்டேவின் 3வது ஓவரில் 5 எக்ஸ்ட்ரா உட்பட 18 ரன்களை எடுத்தார்.
சென்னை அணி போலவே பவர்பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து லக்னோ அணியும் 80 ரன்களை சேர்த்தது.
எனினும் தீபக் ஹூடா மற்றும் குர்ணால் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களை ஆட்டமிழக்க அந்த அணியின் வேகம் குறைந்தது.
பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் (21), நிக்கோலஸ் பூரன் (32) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பதற்றம் ஏற்படுத்திய தேஷ்பாண்டே
எனினும் இமாலய இலக்கை குறிவைத்த இறுதிக்கட்டத்தில் ஆவேஷ் கானுக்கு பதிலாக இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ஆயுஷ் பதோனியும், கிருஷ்ணப்பா கௌதமும் போராடினர்.
6 பந்துகளில் 28 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற கடினமான நிலையில் இறுதி ஓவரை துஷார் தேஷ்பாண்டேக்கு வழங்கினார் கேப்டன் தோனி.
உடனே மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் பதட்டம் அதிகரிக்க, முதல் பந்தில் வைட், பிறகு நோ பால் என தனது வழக்கமான சொதப்பலை தொடர்ந்தார். எனினும் அடுத்த 5 பந்துகளில் ஒரு விக்கெட் உட்பட 12 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதேவேளையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
சென்னை அணி தரப்பில் 4 விக்கெட்டுகள் எடுத்த மொயின் அலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் 7 பவுலர்கள் பந்துவீசிய நிலையில் தீபக் சகார்(55), துஷார்(45) கூட்டணி மட்டும் 100 ரன்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
“தர்மபுரி சிப்காட்டில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம்”: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
“ஒன்றிணைந்து போராடுவோம்” – சமூக நீதி மாநாட்டில் மு.க.ஸ்டாலின்