கடந்த மார்ச் 31ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் 16வது சீசன்.
இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற 29 வது லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐடன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஹேரி ப்ரூக் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர்.
13 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது ஹேரி ப்ரூக் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். 26 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா 1 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ராகுல் திரிபாதி 21 ரன்னில் வெளியேற, கேப்டன் எய்டன் மார்க்ரம் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கடந்த போட்டிகளில் அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் ஹெய்ரிக் கிளாசன் 17 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மயங்க் அகர்வால் 2 ரன்னில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ரவிந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஆகாஷ் சிங், மஹீஷ் தீக்சரா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.தொடக்கத்தில் ஹைதராபாத் அணி நல்ல ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி ரன்குவிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதை அடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.
தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதனிடையே விக்கெட்டுகள் ஏதுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தது. அப்போது 35 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த அஜிங்யா ரஹானே மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் தலா 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் தொடக்க வீரர் டெவோன் கான்வே சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். அதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
இந்த நிலையில் 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 138 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இருந்தாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட் விழுந்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் அனைவரும் we want dhoni என்று அரங்கம் அதிர முழக்கமிட்டனர்.
இந்த போட்டியை மஞ்சள் நிற டீசர்ட் அணிந்தபடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு களித்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கிரிக்கெட் போட்டியை ரசித்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கர்நாடகா தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ் வேட்பாளர்!
கொரோனா பரவல்: தமிழகத்துக்கு மத்திய அரசு கடிதம்!