ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. 2 அணிகளுமே தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அந்த வெற்றி நடையை தொடர வேண்டும் என்ற நோக்கோடு களமிறங்கின.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
குஜராத் அணிக்கு டாஸ் சாதகமாக சென்றதுபோல, பந்துவீச்சு சாதகமாக அமையவில்லை. சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, 6 பவுண்டரி, 3 சிக்ஸ் என 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்து வெளியேறினார். இதனால், சென்னை அணி பவர்-பிளே முடிவில் 69 ரன்கள் குவித்திருந்தது.
ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாத் அந்த அதிரடியை தொடர்ந்தார். அவரும் 36 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே, ஒரு வான வேடிக்கை காட்டி 23 பந்துகளில் 51 ரன்கள் விளாசி அசத்தினார். கடைசியில் வந்த சமீர் ரிஸ்வி அதிரடியாக 6 பந்துகளில் 14 ரன்கள் விளாச, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணிக்காக ரஷீத் கான் 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
207 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு, பவர்-பிளேயில் ஒரு மிரட்டலான வரவேற்பை வழங்கினார் தீபக் சஹர். துவக்க ஆட்டக்காரர்கள் ரித்திமான் சாகா மற்றும் சுப்மன் கில் என 2 பேரின் விக்கெட்களையும் வீழ்த்தினார். இதனால், அந்த அணி பவர்-பிளேவில் 43 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
அடுத்து வந்த விஜய் சங்கரும், டெரில் மிட்சல் பந்துவீச்சில் தோனி பிடித்த ஒரு அற்புதமான கேட்சினால் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் விளைவாக, 10 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. 60 பந்துகளில் 127 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது.
இதற்கிடையில், இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் மட்டும் 37 (31) ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். இதன் காரணமாக, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம், 63 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அபார வெற்றியை பதிவு செய்த சென்னை அணி, விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. பந்துவீச்சில், சென்னை அணிக்காக தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான் என மூவருமே தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: உப்பை எந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!