”சதுரங்க விளையாட்டில் ஏமாற்று வேலைகள் அதிகம் இல்லை” என செஸ் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த 31 வயதான மேக்னஸ் கார்ல்சன், கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்றார்.
விலகிய கார்ல்சன்
இந்தத் தொடரின் 3ஆவது சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான ஹான்ஸ் நீமனுடன் மோதினார் கார்ல்சன். இதில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரே ஒரு நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்திலிருந்து விலகினார் கார்ல்சன்.
இதனால் ஹான்ஸ் நீமன், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஹான்ஸ் நீமன் விவகாரம் தொடர்பாக முதல்முறையாக வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டார் கார்ல்சன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “செஸ் விளையாட்டில் ஏமாற்றுவது மிகப்பெரிய விஷயம். இதுசெஸ் விளையாட்டுக்கும், செஸ்போட்டியை நடத்தும் அமைப்பாளர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றே கருதுகிறேன்.
நாம் விரும்பும் விளையாட்டின் மீது அக்கறை கொண்ட அனைவரும் செஸ் விளையாட்டு மீதான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏமாற்றுவதை கண்டறியும் முறைகளை அதிகரிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மோசடியில் ஈடுபடுபவர்களை நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.
இந்த வகையில் என்னுடைய முயற்சியாக கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் ஏமாற்றியவர்களுடன் விளையாட நான் விரும்பவில்லை” என அதில் தெரிவித்திருந்தார்.
இது, சதுரங்க உலகில் புயலைக் கிளப்பியதுடன், இதுதொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மேலும், கார்ல்சனுக்கு எதிராக 100 மில்லியன் டாலர் கேட்டும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ளார், செஸ் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த்.
ஏமாற்று வேலை அதிகமில்லை
கொல்கத்தாவில் நேற்று (நவம்பர் 28) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பிடிஐ நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “இதில், நிச்சயமாக, (ஏமாற்றுவதற்கான) சாத்தியம் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அது அதிகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்த மோசடி, ஆஃப்லைனில் இல்லை.
ஆன்லைனில், இது எந்த அளவுக்கு இருக்கிறது என எனக்குத் தெரியாது. ஆனால் அது அதிகமாக இல்லை. ஆன்லைனில் மில்லியன் கணக்கான கேம்கள் விளையாடப்படுகின்றன.
இருப்பினும், பிரச்சனையை தாமதமாக விட்டுவிடாமல், முன்கூட்டியே தீர்வு காண்பது நல்லது.
சதுரங்கத்தில் மோசடிக்கு எதிரான போராட்டம் ஓரளவுக்கு ஆயுதப் போட்டி போன்றது. சதுரங்க மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதுகுறித்த தரவுகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
அம்மா உணவகங்கள் நட்டத்தில் இயங்கினாலும்… மேயர் பிரியா முக்கிய அறிவிப்பு!
அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?