இப்போது மட்டும் வந்த ‘தெலுங்கு’… குகேஷ் பற்றி சந்திரபாபு, பவன் கல்யாண் பதிவு!

Published On:

| By Minnambalam Login1

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் உள்ள ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் கடந்த நவம்பர் 25-ம் தேதி தொடங்கியது.

இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் மோதினார்.

14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 13-வது சுற்று ஆட்டம் ஆட்டத்தின் முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

நேற்று (டிசம்பர் 12) இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில், குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங் லிரென் வெள்ளை காய்களுடனும் ஆட்டத்தை தொடங்கினர்.

டிராவை நோக்கி செல்வது போன்று தெரிந்த நேரத்தில் 58-வது நகர்த்தலின் போது குகேஷ், டிங் லிரெனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

18 வயதில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், இளம் உலக செஸ் சாம்பியன் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார் சென்னையை சேர்ந்த குகேஷ்.

இதற்கு முன்னதாக ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 22 வயதில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது.

சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு ரூ.11 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. குகேஷுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நெட்டிசன்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, குகேஷ் இத்தகைய வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இளையதலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், குகேஷ் தெம்மராஜூ என்று குறிப்பிட்டு தமிழ்நாட்டு தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் அவர் என்பது தெலுங்கு மக்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு தெலுங்கு பாய்க்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் , துணை முதல்வரின் இத்தகைய பதிவுகளை படித்த நெட்டிசன்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். குகேஷ் பயிற்சிக்கோ அல்லது வேறு எதற்குமோ எந்தவிதத்திலும் இதுவரை உதவிடாத பவன் கல்யாண், சந்திர பாபு நாயுடு போன்றவர்கள் இப்போது மட்டும் தெலுங்கு என்று தூக்கி பிடிப்பது ஏன்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

Paralympics 2024: 29 பதக்கங்களுடன் இந்தியா வரலாற்று சாதனை – முழு பட்டியல்!

ஆதாரத்தை அழித்து சிக்கிய திலீப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share