சாம்பியன்ஸ் டிராபி அணி தேர்வு : கம்பீர் – ரோகித் இடையே வலுக்கும் மோதல்!

Published On:

| By christopher

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி மீது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இடையே கருத்து வேறுபாடு நிலவுவதகாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி நேற்று (ஜனவரி 18) அறிவிக்கப்பட்டது.

அதன்படி 15 பேர் கொண்ட அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா*, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஒருவேளை உடல்நிலை தகுதி பெறாத பட்சத்தில், அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானா தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி தேர்வில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் – கேப்டன் ரோகித் சர்மா இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக அணி அறிவிப்புக்கு முன்னதாக கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இடையே நீண்ட பேச்சுவார்த்தை நடந்தது.

ஹார்டிக் பாண்டியாவை துணை கேப்டனாகவும், சஞ்சு சாம்சனை விக்கெட் கீப்பராகவும் நியமிக்க கம்பீர் பரிந்துரைத்தார். ஆனால் துணை கேப்டனாக சுப்மன் கில்லையும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்தையும் ரோஹித் மற்றும் அகர்கர் இருவரும் இறுதியில் தேர்வு செய்தனர்.

வரும் பிப்ரவரி 6,9, 12 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளுடன் இந்திய அணி மோதுகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு முதுகுவலியால் காயமடைந்த பும்ரா உடல் தகுதி பெறாமல் போகலாம் என்று கருதுவதால் ஹர்ஷித் ராணாவை மாற்றாக பெயரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ரோகித் நேற்று தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதி அணியை பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் ஐ.சி.சி.யிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே வேளையில் இந்திய அணித் தேர்வில் கம்பீர் – ரோகித் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இங்கிலாந்து உடனான தொடருக்கு பிறகு அணித் தேர்வில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share