சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இன்று (மார்ச் 2) அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
துபாயில் இன்று இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் (2 ரன்கள்), ரோகித் சர்மா (15 ரன்கள்), விராட் கோலி (11 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆரம்பத்திலேயே இந்திய அணி திணறியது.

அடுத்தாக களமிறங்கிய ஸ்ரேயஸ், ஹர்திக் பட்டேல் ஜோடி நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அணியின் ஸ்கோர் உயரத்தொடங்கியது. கடைசியாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மேட் ஹென்ரி 5 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். Champions Trophy India beat
இதனால் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியில் வில் யங், ரச்சின் ரவிந்திரா ஆகியோர் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை தொடர்ந்த இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

அடுத்தாக களமிறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடினார். ஆனால், மற்ற வீரர்கள் இந்திய அணி வீரர்களின் சுழல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அவுட்டாகினர்.
ஆனால், கேன் வில்லியம்சன் மட்டும் தொடர்ந்து நிலைத்து நின்று ஆடினார். அவரும் 81 ரன்களில் வெளியேறினார். இவரை தொடர்ந்து களமிறங்கிய, மேட் ஹென்றி, ஜேமிசன், வில்லியம் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர்.
இதனால் 45.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய வருண் சக்கரவர்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி, மார்ச் 4-ஆம் தேதி துபாயில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.