பெண்கள் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் ஸ்பெயின் அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளது.
32 அணிகள் பங்கேற்ற 9-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது.
பிரிஸ்பேனில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக வெண்கலப்பதக்கத்தை பெற்றது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று (ஆகஸ்ட் 20) இரவு இங்கிலாந்து – ஸ்பெயின் இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது.
32 ஆண்டு கால பெண்கள் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இறுதிப்போட்டியில் நுழைவது இரு அணிகளுக்கும் இதுவே முதல்முறை. எனவே மைதானத்தில் இருந்த இரு நாட்டு ரசிகர்களும் உற்சாகத்தில் திளைத்தனர்.
இந்த நிலையில் ஆட்டம் தொடங்கிய 29வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீராங்கனை கார்மோனா இங்கிலாந்துக்கு எதிராக முதல் கோலை அடித்தார். இதன் மூலம் முதல் பாதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
A beautiful finish from Carmona to win it! 🇪🇸@xero | #FIFAWWC pic.twitter.com/tYJsjHbhWf
— FIFA Women's World Cup (@FIFAWWC) August 20, 2023
தொடர்ந்து நடந்த 2-வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தனர்.
ஆனால் யாருமே கோல் அடிக்காத நிலையில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது.
இதன் மூலம் கால்பந்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை இரண்டையும் கைப்பற்றிய 2-வது அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றது. முன்னதாக ஜெர்மனியும் இச்சாதனையை செய்துள்ளது.
இதில் ஓர் அதிசயம் என்னவென்றால், கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்தில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
அப்போது ஸ்பெயின் அணி குரூப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக 0-1 என்ற கணக்கில் தோல்வியுற்ற பிறகே எழுச்சியுடன் முன்னேறி இறுதி ஆட்டத்தில் ஒரு கோல் போட்டு சாம்பியன் ஆனது.
அந்த சம்பவம் ஸ்பெயின் மகளிர் அணிக்கும் தற்போது நடப்பு தொடரில் நடந்துள்ளது. ஸ்பெயின் அணி குரூப் பிரிவில் ஜப்பானிடம் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
அதன்பின்னர் எழுச்சி பெற்ற அணி, அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தில் ஒரே கோலுடன் கோப்பையை வென்றுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல அச்சுறுத்தும் உக்ரைன் மக்கள்!
டி20: தொடரை வென்றது இந்திய அணி!