உலக் கோப்பை நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. குறிப்பாக, கேரள மாநிலம் கொச்சியில் நட்புரீதியிலான ஆட்டத்தில் இந்தியாவுடன் மோத வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸியும் அர்ஜெண்டினா அணியுடன் இந்தியா வருகிறார்.
இதற்கான முயற்சிகளை கேரள அரசு எடுத்து வருகிறது. அர்ஜெண்டினா அணி இந்தியா வரவேண்டுமென்றால் அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்துக்கு ரூ.100 கோடி கொடுக்க வேண்டும். அப்படி, மாநில அரசு பணம் செலுத்த வேண்டுமென்றால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதியளிக்க வேண்டும். இதற்கான அனுமதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் வழங்கி விட்டது.
இந்த 100 கோடி பல தவணைகளாக கட்டப்படும். முதல் தவணை கட்டிய பிறகே, அர்ஜெண்டினா கால்பந்து சங்க நிர்வாகிகள் கொச்சிக்கு வருகை தந்து மைதனத்தை பார்வையிடுவார்கள். இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கெள்ளும். அர்ஜெண்டினா கால்பந்து சங்க நிர்வாகிகளின் பரிந்துரைப்படி, மைதானத்திலும் மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
இதற்கிடையே, கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர் ரஹீமான் செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், ‘ கேரளா வரும் மெஸ்ஸி, பள்ளி மாணவர்கள், பொதுமக்களுடன் 20 நிமிடங்கள் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நட்புரீதியிலான போட்டிகளில் அர்ஜெண்டினா அணி விளையாடும். அக்டோபர் 25 ஆம் தேதி இந்தியா வரும் அர்ஜெண்டினா அணி வீரர்கள் நவம்பர் 2 ஆம் தேதி தாய்நாடு புறப்பட்டு செல்வார்கள் ‘என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் , பிஃபா அட்டவணைப்படி மேற்கண்ட தேதிகளில் எந்த இன்டர்நேஷனல் விண்டோவும் இல்லை. அக்டோபர் 6 முதல் 14 மற்றும் நவம்பர் 10 முதல் 18 வரை என இரு விண்டோக்கள் உள்ளன. இந்த காலக்கட்டத்தில்தான் கிளப் போட்டிகள் இல்லாமல் இருக்கின்றன. கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த விஷயத்தை தெரியாமல் பேசுகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது, அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக மெஸ்சி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் சர்வதேச நட்பு ஆட்டத்தில் வெனிசூலா அணியுடன் அர்ஜெண்டினா அணி மோதியது. அப்போது, மெஸ்ஸி இந்தியா வந்திருந்தார். இந்த ஆட்டத்தில் நிக்கோலஸ் ஒட்டமெண்டி அடித்த ஒரே கோலால் அர்ஜெண்டின வெற்றி பெற்றது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தை மாத நட்சத்திர பலன்கள்: உத்திரம்
அமெரிக்க செனட்டில் தமிழ் பற்றி தீர்மானம்… சம்பவம் செய்த 15 எம்.பி.க்கள்!