உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி டென்னிஸ் உலகில் முக்கியத்துவம் வாய்ந்த விம்பிள்டன் கோப்பையை கைகளில் ஏந்தியுள்ளார் 20 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ்.
கிரிக்கெட், கால்பந்து போன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படும் விளையாட்டு டென்னிஸ். உடலின் அத்தனை பாகங்களும் நொடிக்கு நொடி வேலை செய்ய வேண்டிய இந்த விளையாட்டில் ஒவ்வொரு தசாப்தங்களும் சில சிறந்த வீரர்களை உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது.
80களில், மெக்கென்றோ, லெண்டில், விளாண்டெர், 90களில், ஆன்ரே அகாசி, போரிஸ் பெக்கர் ஆகியோர் சாம்பியன் வீரர்களாக வலம் வந்தனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களிலும் டென்னிஸ் உலகை ஆட்டி படைத்தவர்கள் ரோஜர் பெடரர், ரஃபேல் நடால். இவர்களை அறியாத டென்னிஸ் ரசிகர்களே கிடையாது. இவர்கள் செய்யாத சாதனைகளும் டென்னிஸ் உலகில் கிடையாது.
வயது மூப்பால் தற்போது இருவரும் களத்தில் இருந்து விலகி இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே கடந்த பத்தாண்டுகளில் தன் பெயரை ஆழமாக டென்னிஸ் வரலாற்றில் பொறித்தவர் தான் செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச்.
டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த நடால்(22) ஃபெடரர்(20) ஆகியோரை தாண்டி 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மாமன்னனாக உருவெடுத்தார் இந்த செர்பிய சிங்கம்.
மேலும் டென்னிஸ் விளையாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த விம்பிள்டன் தொடரில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச், இந்த முறையும் சாம்பியன் பட்டம் வென்று 8 முறை விம்பிள்டன் வென்ற ஃபெடரின் சாதனையை சமன் செய்ய காத்திருந்தார்.
’குறுக்கே இந்த கெளசிக் வந்தா?’
ஆனால் அப்பதான் ’குறுக்கே இந்த கெளசிக் வந்தா’ என்பது போல் நடப்பு விம்பிள்டனில் சூறாவளியாக சுழன்று இறுதிப்போட்டியில் நுழைந்தார் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ்.
நேற்று ஜூலை 16ஆம் தேதி நடந்த இறுதிப்போட்டியில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே களமிறங்கினர் 36 வயதான ஜோகோவிச்சும், 20 வயதே ஆன அல்கராஸும்.
சுமார் 50 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இரு இறுதிப் போட்டியாளர்களுக்கு இடையே மிகப்பெரிய வயது இடைவெளியை டென்னிஸ் உலகம் நேற்று தான் கண்டது.
போட்டி தொடங்கி முதல் சுற்று முடியும் வரை இதில் எப்படியும் ஜோகோவிச் தான் வென்று விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றுவார் என்று அனைவரும் பெரும் நம்பிக்கையில் இருந்தனர்.
ஆனால் யாருமே எதிர்பாராத நிலையில், முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் அல்கராஸ் இழந்த நிலையிலும், கொஞ்சமும் தடுமாறாமல் அடுத்த இரண்டு செட்டுகளை 7-6, 6-1, என்று கைப்பற்றினார். 4வது செட்டை தனது அனுபவத்தால் 3-6 என வென்று ஆட்டத்தை டிராவில் நிறுத்தினார் ஜோகோவிச்.
The moment 🌟#Wimbledon | @carlosalcaraz pic.twitter.com/sjjE7FhGn4
— Wimbledon (@Wimbledon) July 16, 2023
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு எகிற கடைசி செட்டில் ஜெயிக்க இருவரும் தீவிர தாக்குதலை கையில் எடுத்தனர். எனினும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் சிங்கம் அல்கராஸ் 6-4 என்ற செட் கணக்கில், ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார்.
சுமார், 4 மணி நேரம் 43 நிமிடம் நீடித்த இறுதி யுத்தத்தில் வென்று ’புதிய சகாப்தத்தின் அரசன் நான்’ என்று, விம்பிள்டன் கோப்பையுடன் உலகிற்கு அறிவித்துள்ளார் அல்கராஸ்.
யார் இந்த கார்லோஸ் அல்காரஸ்?
ஸ்பெயினில் சுமார் 24,000 மக்கள் வசிக்கும் முர்சியா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா. ஆனால் டென்னிஸ் மீது பெரியளவில் ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் வளர்ந்தவர்.
அல்கராஸின் தாத்தா மற்றும் தந்தை, இருவரும் தொழில் ரீதியாக டென்னிஸ் விளையாடியவர்கள் தான். அவரது தந்தை கார்லோஸ் அல்கராஸ் கோன்சாலஸ் ஸ்பெயினில் பிரபல டென்னிஸ் அகாடமியின் இயக்குநராக உள்ளார்.
தன் மகன் டென்னிஸ் உலகில் ஆகச்சிறந்த வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்ட கோன்சாலஸ், சிறுவயதில் இருந்தே முன்னாள் உலகின் நம்பர் 1 வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்றவருமான ஜுவான் கார்லோஸ் ஃபெரெராவிடம் பயிற்சி பெற வைத்தார்.
நம்பர் 1 வீரர்!
இப்படி தனது குழந்தை பருவத்தில் இருந்தே டென்னிஸ் பேட்டை பிடித்தபடியே வளர்ந்த அல்காரஸ் தனது முதல் ஏடிபி டூர் பட்டத்தை 2021ஆம் ஆண்டு வென்றார்.
தொடர்ந்து ஏடிபி டூரில் வெற்றியை மட்டுமே பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்ட அல்காரஸ், இரண்டே ஆண்டுகளில் 12 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு தனது 19வது வயதில் யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் டென்னிஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் (19 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 6 நாட்கள்) முதலிடம் பிடித்த வீரராக அல்கராஸ் உருவெடுத்தார்.
கனவிலும் நினைக்காத ஜோகோவிச்
இந்த நிலையில் தான் தற்போது, தனது 20 வயதில் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி 2வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் கார்லோஸ் அல்கராஸ்.
தனது ஆட்டம் ரோஜர் ஃபெடரரைப் போலவே இருந்தாலும், சக ஸ்பெயின் வீரரான ரஃபேல் நடால் தான் தனது முன்மாதிரி என்று கூறியுள்ளார் அல்கராஸ், அந்த ஜாம்பவான்களை சாய்த்து கடந்த சில ஆண்டுகளாக தனது கொடியை பறக்கவிட்ட ஜோகோவிச்சை வீழ்த்தியுள்ளார்.
இந்த தோல்வியின் மூலம், செண்டர் கோர்ட் களத்தில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில், கடந்த 10 ஆண்டுகளில் ஜோகோவிச் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும்.
நடப்பாண்டில் ஆஸ்திரேலியா மற்றும் பிரெஞ்சு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜோகோவிச், இந்த தோல்வியால் ஹாட்ரிக் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
மேலும் 8 முறை விம்பிள்டன் தொடரை வென்ற ஃபெடரரின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பையும் ஜோகோவிச் இழந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக விம்பிள்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வந்த ஜோகோவிச், தொடர்ந்து 5வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இத்தனைக்கும் 2008 ஆம் ஆண்டு தான் முதல் கிராண்ட்ஸ்டாம் பட்டம் வெல்லும்போது, 4 வயது பாலகனாய் இருந்த அல்கராஸ், அடுத்த 16 வருடங்களில் டென்னிஸ் உலகில் நுழைந்து தனது கனவை சிதைப்பான் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார் ஜோகோவிச்.
அல்கராஸ் முழுமையான வீரர்!
எனினும், விம்பிள்டன் இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு, அல்கராஸ் குறித்து ஜோகோவிச் பகிர்ந்த வார்த்தைகள் பலருக்கும் ஆச்சரியமூட்டியது.
அவர், “நேர்மையாகச் சொல்வதானால், அல்கராஸ் போன்ற ஒரு வீரருடன் நான் இதுவரை விளையாடியதில்லை. ரோஜர் மற்றும் ரஃபாவின் பலம் மற்றும் பலவீனங்கள் ஆட்டத்தின்போதே வெளிப்படையாக தெரியும்.
ஆனால் கார்லோஸ் மிகவும் முழுமையான வீரர். அவரிடம் பலவீனத்தை அறிவதில் கடைசிவரை சிரமப்பட்டேன். தன்னை களத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிகொள்ளும் திறன் இருப்பதால், அல்கராஸ் இன்னும் அனைத்து மைதானங்களிலும், நீண்ட காலத்திற்கு வெற்றி வீரராக வலம் வருவார்” என்று வாழ்த்தினார்.
ஸ்பெயினில் இருந்து அடுத்த ஜாம்பவான்?
ஜோகோவிச் கூறிய கடைசி வார்த்தை தான், டென்னிஸ் உலகில் அடுத்த தசாப்தத்திற்கான தலைசிறந்த வீரராக கார்லோஸ் அல்காரஸ் உருவாகியுள்ளார் என்பதை காட்டுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக டென்னிஸ் உலகில் கோலோச்சி வரும் மும்மூர்த்திகளில் ஃபெடரர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். நடால் அடுத்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது 36 வயதான ஜோகோவிச்சும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் டென்னிஸ் உலகின் அடுத்த தலைமுறைக்கான நட்சத்திர வீரராக உருவெடுத்து வருகிறார் அல்கராஸ்.
European commentators about Carlos Alcaraz: "It's like watching Virat Kohli in cricket or Michael Jordan in Basketball"
King Kohli is the face of World Cricket 🇮🇳#Wimbledon pic.twitter.com/apqLQZGKIB
— Shekhar (@ShekharPKMKB499) July 17, 2023
இவர் குறித்து வர்ணனையாளர் ஒரு போட்டியில், “கார்லோஸ் அல்கராஸ் விளையாடுவதை பார்க்கும்போது, கிரிக்கெட்டில் விராட் கோலியையும், பேஸ்கட் பாலில் மைக்கேல் ஜோர்டனையும் பார்ப்பது போன்று உள்ளது.” என்று தெரிவித்தார்.
அவர் கூறியது போலவே டென்னிஸ் உலகில் தனது சக நாட்டைச் சேர்ந்த நடாலை போல அல்காராஸும் சாம்பியன் தான் என்பதை தற்போது நிரூபித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜகவுக்கு எதிரான கவுண்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது: ஆர்.எஸ். பாரதி
ராமஜெயம் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!