விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் தற்போதைய நிலை குறித்து டேராடூன் மருத்துவமனை இயக்குநர் பேட்டி அளித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி அருகே இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான, ரிஷப் பண்ட் ஓட்டிச் சென்ற கார், நேற்று (டிசம்பர் 30) அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரிஷப் பண்ட்டிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரிஷப்பை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தவர்களில் பேருந்து ஓட்டுநர் சுஷில் மானும் ஒருவர். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “விபத்தில் சிக்கியவர் ஜன்னல் வழியாக வெளியேறினார்.
தான் ஒரு கிரிக்கெட்டர் என அவர் தெரிவித்தார். அவரது தாயாரை அழைக்கச் சொன்னார். ஆனால், அவருடைய தாயாரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. அது ரிஷப் பண்ட் என்று எனக்குத் தெரியாது.
ஆனால், என் பேருந்தில் இருந்த மற்றவர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள்” என்றார். ரிஷப்பை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் பேட்டரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான வி.வி.எஸ். லட்சுமணனும் பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில், விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து பிசிசிஐ, ‘ரிஷப்புக்கு தலைப்பகுதியில் 2 வெட்டுகளும், வலது முழங்காலில் தசை நார் கிழிந்துள்ளதாகவும், அதேநேரம் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ரிஷப் சிறந்த மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதையும், இந்த அதிர்ச்சிகரமான கட்டத்தில் இருந்து அவர் வெளிவரத் தேவையான அனைத்து ஆதரவையும் வாரியம் பார்த்துக் கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து டேராடூன் மேக்ஸ் மருத்துவமனை இயக்குநர் ஷியாம் ஷர்மா என் டி டிவி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ரிஷப் பண்ட் டிற்கு இன்று காலை நெற்றியில் ஒரு சிறிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். எந்த ஆபத்தும் இல்லை. மேல் சிகிச்சைக்காக அவர் டெல்லிக்கு மாற்றப்பட வேண்டுமா என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
மின் இணைப்புடன் ஆதார்: கடைசி தேதி எப்போது?
துடிக்க துடிக்க மஸ்தான் கொலை – காருக்குள் நடந்தது என்ன?