உற்சாக வரவேற்பளித்த மியாமி… கடும் நெருக்கடியில் மெஸ்ஸி

Published On:

| By christopher

Can champion Messi drag inter Miami into the playoffs in mls

உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனும், கால்பந்து சாம்பியனுமான மெஸ்ஸி நேற்று (ஜூலை 17) அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் இண்டர் மியாமி அணியில் இணைந்தார்.

அமெரிக்காவில் பிரபலமான கால்பந்து தொடராக அறியப்படும் மேஜர் லீக் சாக்கர் (எம்.எல்.எஸ்) தொடரில் விளையாட இண்டர் மியாமி அணிக்காக 2025ஆம் ஆண்டு வரை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,230 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் மெஸ்ஸி.

இதனையடுத்து புளோரிடாவில் உள்ள இன்டர் மியாமியின் டிஆர்வி பிஎன்கே ஸ்டேடியத்தில் நேற்று மெஸ்ஸியின் ஜெர்ஸியை அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்ற இந்த விழாவில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Image

அதனைத்தொடர்ந்து கிளப் உரிமையாளர் டேவிட் பெக்காமுடன் இணை உரிமையாளர்களான ஜோஸ் ஆர் மாஸ், ஜார்ஜ் மாஸ் ஆகியோர் ’10’ எண் பெயர் பொறித்த இண்டர் மியாமியின் ஜெர்ஸியை மெஸ்ஸிக்கு வழங்கினர். இதனை அங்கிருந்த ரசிகர்கள் உற்சாக குரலெழுப்பி வரவேற்றனர்.

தொடர்ந்து ரசிகர்கள் முன்னிலையில் பேசிய மெஸ்ஸி, “நான் இங்கு வந்ததிலிருந்து எனக்கு அளித்து வரும் அன்பிற்காக, மியாமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களுடன் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

உண்மையில் போட்டியில் பங்கேற்று நமது அணி வெற்றி பெற விரும்புகிறேன். இண்டர் மியாமி கிளப் தொடர்ந்து வளர வேண்டும்” என்று மெஸ்ஸி தனது விருப்பத்தை தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் மேஜர் லீக் சாக்கரில் இண்டர் மியாமி அணி கடைசியாக விளையாடிய 11 போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் அதள பாதாளத்தில்  பரிதாபகரமான நிலையில் உள்ளது.

இதனால் மெஸ்ஸிக்கு வரும் நாட்களில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் சவால் மிகுந்ததாகவே இருக்கும்.

வரும் 21ஆம் தேதி லீகா MX அணியான க்ரூஸ் அசுலுக்கு எதிரான லீக் கோப்பையில் இண்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி தனது முதல் ஆட்டத்தில் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி சார்லோட்டி அணிக்கு எதிராக மேஜர் லீக் சாக்கர் தொடரில் இண்டர் மியாமி அணிக்காக முதல் போட்டியில் மெஸ்ஸி களமிறங்குகிறார்.

கிறிஸ்டோபர் ஜெமா

எதிர்கட்சிகள் கூட்டம்: மீண்டும் திமுகவை சாடிய மோடி

அமைச்சர் பொன்முடி இல்லாமல் நடைபெற்ற பட்டமளிப்பு விழா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel