இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் நட்சத்திரம் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி இரட்டை சதத்தால், இந்திய அணி 396 ரன்களை குவித்தது. ஜெய்ஸ்வால் 209 ரன்களை சேர்த்திருந்தார்.
இதை தொடர்ந்து,தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து, ஜஸ்பிரிட் பும்ராவின் வேகத்தில் 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
பின்,2-வது இன்னிங்ஸில் இந்திய அணிக்காக விளையாட களமிறங்கிய, சுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதம் விளாச, இந்திய அணி அந்த இன்னிங்ஸில் 255 ரன்கள் சேர்ந்திருந்தது.
இதை தொடர்ந்து, 399 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாட களமிறங்கியது.
ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் சிறப்பான துவக்கம் அளிக்க, 3-வது நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்நிலையில், இன்றைய(பிப்ரவரி5) 4ஆம் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் சுழலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை விரைவாக பறிகொடுத்தது.
இதன் காரணமாக, உணவு இடைவேளைக்கு முன்னரே 6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 194 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் மீதி விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து,292 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.இதன்மூலம், இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
தற்போது இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் 1-1 என சமநிலையில் உள்ளன. இதனால் 3-வது டெஸ்டில் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி!
அரசம்பட்டி விதையா? ஆந்திரா விதையா?: முதல்வரை சந்திக்கும் தென்னை விவசாயிகள்!