இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கபா மைதானத்தில் கடும் மழைக்கிடையே இன்று (டிசம்பர் 18) நடைபெற்று வந்த கடைசி நாள் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஒன்றரை நாள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை துவங்கியது இந்திய அணி. ஜெய்ஸ்வால், கோலி, ரோகித் ஆகியோரின் மோசமான பேட்டிங்கால் தடுமாறியது இந்திய அணி. எனினும் கே.எல் ராகுல்(84) மற்றும் ஜடேஜா(77) இருவரும் நிதானமாக பேட்டிங் செய்து அணியை மீட்டனர்.
ஆனாலும் ஃபாலோ ஆனை தவிர்க்க 245 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், 9வது விக்கெட்டுக்கு இணைந்த பும்ரா – ஆகாஷ் தீப் ஜோடி பொறுப்புடன் விளையாடி காப்பாற்றியது.

இன்று தொடங்கிய 5வது நாள் ஆட்டத்தில் ஆகாஷ் தீப் 31 ரன்களுக்கு விக்கெட் இழந்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து, கடைசி நாளில் இரண்டு பகுதி ஆட்டம் மட்டுமே மீதம் இருந்த நிலையில், 185 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது ஆஸ்திரேலிய அணி.
எனினும் அதிரடியாக பேட்டிங் ஆட செய்த ஆஸ்திரேலியா வீரர்களை பும்ரா (3) -ஆகாஷ்(2) – சிராஜ்(2) ஆகியோர் அடங்கிய வேக கூட்டணி ஆட்டமிழக்க செய்தது.
7 விக்கெட்டுக்கு 89 ரன்கள் மட்டுமே குவித்த ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
இன்னும் ஆட்டம் முடிவதற்கு குறைந்தபட்சம் 54 ஓவர்கள் வீச வேண்டிய நிலையில், மைதானத்தை கருமேகம் சூழ்ந்து மழை கொட்டியதை அடுத்து 3வது டெஸ்ட் போட்டி டிரா ஆனதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: உடலை ஸ்லிம்மாக்க உண்ணாவிரதம் வேண்டாமே!
ஹெல்த் டிப்ஸ்: திடீர் தசைப்பிடிப்பா… இதையெல்லாம் செய்யாதீங்க!
டாப் 10 நியூஸ் : காங்கிரஸ் போராட்டம் முதல் சென்னைக்கு ரெட் அலர்ட் வரை!