FIFA WorldCup : லீக் சுற்றுகளில் இருந்து வெளியேறும் நெய்மர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரேசில் அணியைச் சேர்ந்த இரு முக்கிய வீரர்கள் உலகக்கோப்பை லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் செர்பியாவை 2-0 என்ற கணக்கில் பிரேசில் வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் செர்பிய வீரர்கள் ஆரம்பம் முதலே முரட்டுத்தனமாக விளையாடினர். பிரேசில் அணியில் ஒருவருக்கு கூட மஞ்சள் அட்டை பெறாத நிலையில், செர்பிய அணியில் மூன்று வீரர்கள் மஞ்சள் அட்டை பெற்றனர்.
குறிப்பாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் மீது ஆட்டம் முழுவதும் தொடர் தாக்குதலில் செர்பிய வீரர்கள் ஈடுபட்டனர். எனினும் ஆட்டத்தின் ஆரம்பம் முழுவதும் வலியை பொறுத்துக்கொண்டு ஆடினார் நெய்மர்.
79வது நிமிடத்தில் செர்பியா டிஃபென்டர் நிகோலா மிலென்கோவிச்சால் நெய்மர் தாக்கப்பட்டார். அப்போது கணுக்காலில் கடும் வலி ஏற்படவே அடுத்த 10 நிமிடத்தில் மாற்றப்பட்டார்.
இந்நிலையில் காயத்தால் அவதியடைந்த நெய்மர் மற்றும் சக அணிவீரர் டானிலோ எம்ஆர்ஐ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இருவருக்கும் கணுக்காலில் தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நெய்மர் மற்றும் டானிலோ இருவரும் அடுத்து வரும் சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூனுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் விளையாடமாட்டார்கள் என்று அணியின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி பிரேசில் ரசிகர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரேசில் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
FIFA WorldCup : ஜப்பானிடம் சரிந்த ஜெர்மனி… வீரநடைபோடுமா? வீட்டுக்கு செல்லுமா?
மின் கட்டணம்: ஆதார் இணைப்பதற்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா?