தென் கொரியா அணியை 4-1என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு பிரேசில் அணி முன்னேறியது.
22-வது ஃபிஃபா உலக கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று (டிசம்பர் 5)தோகாவில் உள்ள ராஸ் அபு அபவத் மைதானத்தில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின.
காயம் காரணமாக ஓய்வில் இருந்த பிரேசில் அணி வீரர் நெய்மர் இந்த போட்டியில் களமிறங்கியதால் பிரேசில் அணி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
ஆட்டம் துவங்கிய 7-வது நிமிடத்திலேயே பிரேசில் அணி வீரர் வினி ஜூனியர் கோல் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து, 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் நெய்மர் கோல் அடித்தார். அடுத்தடுத்து பிரேசில் அணி வீரர்கள் இரண்டு கோல்கள் அடித்து தென் கொரியா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
தொடர்ந்து ஆட்டத்தின் 29-ஆவது நிமிடத்தில் ரிச்சர்லிசன், 36 -ஆவது நிமிடத்தில் லூகாஸ் கோல் அடித்தனர். இதனால் தென்கொரியா அணி வீரர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.
கோல் அடித்த பூரிப்பில் இருந்த பிரேசில் அணி வீரர்கள் ஒவ்வொரு கோல் அடித்த பின்பும் சம்பா நடனம் ஆடினர். இதனால் மைதானத்தில் இருந்த பிரேசில் அணி வீரர்கள் கொண்டாட்டம் அடைந்தனர்.
முதல்பாதி முடிவில் பிரேசில் அணி 4-0என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது ஆட்டத்தின் துவக்கத்தில் தென்கொரியா அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பிரேசில் அணி வீரர்கள் கோல் அடிக்க முயன்றதை தடுத்தனர். 76-வது நிமிடத்தில் தென்கொரியா அணி வீரர் பைக் சியூங் ஹோ கோல் அடித்தார். இது தென் கொரியா அணிக்கு ஆறுதலாக அமைந்தது.
ஆட்டத்தின் முடிவில் பிரேசில் அணி 4-1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதி போட்டியில் பிரேசில் அணி, குரோஷியா அணியிடம் மோத உள்ளது.
செல்வம்
அதிமுக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
நாடாளுமன்ற கூட்டத்தொடர்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!