மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் நட்சத்திர டி20 வீரருமான டுவைன் பிராவோ 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
2004ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமான டுவைன் பிராவோ இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள், 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டி20 போட்டிகளில் 2006 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் டுவைன் பிராவோ அவரது 545வது டி20 போட்டியில் 600-வது விக்கெட்டை கைப்பற்றி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பிராவோ ரிலீ ரோசோவ் விக்கெட்டை LBW முறையில் கைப்பற்றியதை தொடர்ந்து சாம் கரனை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 78 விக்கெட்டுகளும், சென்னை அணிக்காக விளையாடி 154 விக்கெட்களும் இதனை தவிர உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் பங்கேற்று 261 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 466 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
- க.சீனிவாசன்