ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி… இன்னும் WTC பைனல் ரேஸில் உள்ளதா இந்தியா?

Published On:

| By christopher

Boxing Day Test : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் படுதோல்வியடைந்த நிலையிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது என்ற ஆச்சரியமான தகவல் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்த தொடர் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மற்றும் டிரா என தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்தியா படுதோல்வி!

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் (4வது டெஸ்ட்) போட்டி தொடங்கியது.

ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்று 92 ஓவர்களில் 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் இந்திய அணி 155 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. இதன்மூலம் தற்போது நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால்(84) மற்றும் ரிஷப் பண்ட்(30) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா(9), கே.எல். ராகுல்(0) மற்றும் விராட் கோலி(5) உட்பட மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

WTC புள்ளிப்பட்டியல் வெளியீடு!

பாக்சிங் டே டெஸ்டில் 184 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியை சந்தித்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற மெல்லிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை முடிந்த நிலையில் ’WTC புள்ளிப்பட்டியல்’ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் 66.67 PCT% புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி ஏற்கெனவே WTC இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஆஸ்திரேலியா 61.46 PCT% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 52.78 PCT% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்தியா தகுதி பெற என்ன வழி?

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற, ரோகித் சர்மா தலைமையிலான அணி, ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் தொடங்கும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது.

அதில், 2-0 அல்லது 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும்.

மேற்கூறியபடி நடந்தால், WTC 2023-25 ​​புள்ளிப்பட்டியலானது, இந்தியா 55.26 PCT% ஆகவும், ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 53.51 PCT% ஆகவும், இலங்கை அதிகபட்சமாக 53.85 PCT% ஆகவும் முடிவடையும்.

ஆனால் சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ மூன்றாவது WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ரேஸில் இருந்து வெளியேறும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கிறிஸ்டோபர் ஜெமா

பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு : விஜய் சேதுபதி கோரிக்கை… அன்பில் மகேஸ் ரியாக்சன்!

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 : ஸ்டாலினுக்கு ராமதாஸ், முத்தரசன் வலியுறுத்தல்!

15 நிமிட சந்திப்பு… விஜய்க்கு வாழ்த்து சொன்ன கவர்னர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share