பார்டர் கவாஸ்கர் டிராபி : ரோகித் சர்மா அரைசதம்… திணறும் ஆஸ்திரேலியா

விளையாட்டு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின்-ஜடேஜாவின் பந்து ஆதிக்கத்தினை தொடர்ந்து, கேப்டன் ரோகித் சர்மாவின் அரைசதத்துடன் இந்தியா முன்னிலையில் உள்ளது.

பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் இன்று (பிப்ரவரி 9) தொடங்கியது.

ஜடேஜா – அஸ்வின் கூட்டணி அசத்தல்

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ். அதன்படி களமிறங்கிய தொடக்கவீரர்களான வார்னர் மற்றும் கவாஜாவை தலா 1 ரன்னில் இந்தியாவின் முகமது ஷமி – சிராஜ் கூட்டணி அவுட் செய்தனர்

அதனைத்தொடர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடிய லபுஷேன் மற்றும் ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றி தனது மிரட்டல் பந்துவீச்சை தொடங்கினார் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.

அவருடன் அஸ்வினும் கூட்டணி சேர இருவரும் போட்டிப்போட்டு ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வேட்டையாடினர்.

இருவரின் மாய சுழலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களுக்கு சுருண்டது.

இதில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா அரைசதம்

இதனையடுத்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை தொடங்கினர்.

ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் அடித்து இந்தியாவின் கை ஓங்கி இருப்பதை முன் அறிவித்தார் ரோகித் சர்மா.

தொடர்ந்து அதிரடியை காட்டிய ரோகித் அரைசதம் அடித்த நிலையில், மறுபுறம் மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் 20 (71) ரன்களில் டோட் மர்பி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே முக்கிய விக்கெட்டை ஆஸ்திரேலியாவின் 22 வயதான அறிமுக வீரர் டோட் மர்பி எடுத்து கொடுத்துள்ளார்

அதன்பின்னர் களமிறங்கிய ஆல்ரவுண்டர் அஸ்வின் 5 பந்துகளை சந்தித்த நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அவருடன் ரோகித் சர்மா 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.

2வது நாள் : ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

பலத்த எதிர்பார்ப்புடன் துவங்கிய முதல் நாள் ஆட்டத்தில், பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது.

ரன்குவிப்பை மட்டுமே கட்டுப்படுத்திய நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள்.

முதல் நாள் முடிவில் 100 ரன்கள் பின் தங்கிய நிலையில் கைவசம் 9 விக்கெட்டுகளுடன் நாளை 2வது நாள் ஆட்டத்தை இந்தியா தைரியமாக எதிர்கொள்ளும்.

அதே நேரத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவிற்கு கடும் நெருக்கடியை கொடுக்க நாளை ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

140 கோடி மக்களின் நம்பிக்கையை பிரதமர் பெற்றுள்ளாரா? – ஆ.ராசா எம்பி

பரந்தூர் விமான நிலையம்: டெண்டர் அவகாசம் நீட்டிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *