பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும்132 ரன்களிலும், பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கிய 2வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
ஆனால் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் 2-1 கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இருப்பினும் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. ஆனால், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணியால் தகுதி பெற முடியும்.

எனவே கடைசி போட்டியை வென்றாக வேண்டும் என்ற உறுதியோடு நேற்று (மார்ச் 9) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்திருந்தது. தொடக்க ஆட்டக்காரரான கவாஜா 104 ரன்னிலும் கீரின் 49 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
2வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய கவாஜா மற்றும் கீரின் இணையைப் பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். இப்படி இருந்த நிலையில், அஸ்வின் வீசிய பந்தை விளாசினார் கீரின். ஆனால் பரத் கீரின் அடித்த பந்தை கேட்ச் பிடித்ததால் அவர் 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய பவுலர்கள் ஆட்டமிழக்க செய்தனர். 480 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 167.2 ஓவரில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக கவாஜா 180 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக 130வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஷமி 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா மற்றும் அக்சர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட் இழப்பிற்குப் பிறகு இந்திய அணி விளையாடி வருகிறது.
மோனிஷா
பாட்டிக்காக கொள்ளையனுடன் சண்டை போட்ட 10 வயது சிறுமி!
சேப்பாக்கம் சிஎஸ்கே வின் கோட்டை…தோனிக்கு சிறப்பான ஆண்டு…ஆஸ்திரேலிய வீரர் ஹெய்டன்