ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் மோதவிருக்கின்றன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைய இரண்டு அணிகளுக்குமே இது முக்கியமான தொடராகவும் அமைந்திருக்கிறது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் தொடங்குகிறது.
பிப்ரவரி 1 முதல் 13 வரை முதல் டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 17 முதல் 21 வரை 2வது டெஸ்ட் போட்டியும், மார்ச் 1 முதல் 5 வரை 3வது டெஸ்ட் போட்டியும், மார்ச் 9 முதல் 13 வரை 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபரில் தான் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முதல்முறையாக விளையாடப்பட்டது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடங்கியதில் இருந்தே இந்தியா தான் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
காரணம் இதுவரை 26 ஆண்டுகளில், 15 முறை நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்தியா இதுவரை இந்தியா 9 முறையும், ஆஸ்திரேலியா 5 முறையும் கோப்பையை வென்றுள்ளது. 1 முறை ஆட்டம் டிராவில் முடிந்து கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதில் இந்திய மண்ணில் ஒரு முறை மட்டுமே ஆஸ்திரேலியா கோப்பை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்னர் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஷ்வினின் சுழற்பந்துகளை சமாளிக்க டூப்ளிகேட் அஷ்வினை வைத்து பயிற்சி பெற்று வரும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற உறுதியோடு ஆஸ்திரேலியா செயல்பட்டு வரும் நிலையில், இந்திய அணியில், ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கார் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் அவர் கிரிக்கெட் களத்திற்குத் திரும்புவதற்குக் கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. ரிஷப் பண்ட்-க்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் விளையாடுவார் என்று ரவிசந்திரன் அஷ்வின் முன்னதாக தெரிவித்திருந்தார்.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேக் சேப்பல், “முக்கியமான வீரர்களான ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயத்தால் சிக்கித் தவிப்பதால் இந்திய அணி சொந்த மண்ணில் பாதிப்பைச் சந்திக்கக்கூடும்.
இதனால் இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணியால் நிச்சயம் வெல்ல முடியும். விராட்கோலியை தான் இந்திய அணி அதிகம் நம்பி இருக்கிறது. இந்திய ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் உடனடியாக மாற வேண்டியது அவசியமானதாகும்.
இந்திய மைதானங்கள் சுழற்பந்திற்கு ஏற்றது போல் இருக்கும் என்பதால் கிரீன் கேமருன் உடன் இணைந்து 4 பவுலர்கள் சிறப்பாகச் செயல்பட உள்ளனர். இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு நல்ல திட்டமிடுதலுடன், பொறுமையும், விடாமுயற்சியும் அவசியமானதாகும்” என்று பேசினார்.
தொடரைக் கைப்பற்றி விடப் பல முயற்சிகளைத் தீவிரமாக எடுத்து வரும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த இந்திய வீரர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
இரட்டை இலை: ஸ்டாலின் வெளிப்படுத்திய விருப்பம்!
“சாகப்போனேன், சாகவில்லை வரியாக வாழும் வாணி ஜெயராம்”: மதன் கார்க்கி