ஊக்கமருத்து சோதனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி தோல்வி அடைந்ததால் காமன்வெல்த் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இங்கிலாந்து பெர்மிங்காம் நகரில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் இந்தியா உட்பட 72 உலகநாடுகளில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவின் சார்பில் மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள். இதில் பேட்மிண்டன், ஹாக்கி, மல்யுத்தம் உட்பட 19 விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பதக்கத்தை வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் காமன்வெல்த் தொடரை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருத்து சோதனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி தோல்வி அடைந்ததால் காமன்வெல்த் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனலட்சுமி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது
க.சீனிவாசன்