2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிவடைவதற்கு முன்னேயே, 2024 ஐ.பி.எல் தொடருக்கான எதிர்பார்ப்பு எகிற துவங்கிவிட்டது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம், வரும் டிசம்பர் 19 அன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதல் முறையாக, இந்த மினி ஏலம் இந்தியாவுக்கு வெளியே துபாயில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. Ben stokes set to be released csk ipl 2024
இதை ஒட்டி, ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு வீரர்களை மாற்றும் ‘ட்ரான்ஸ்பெர் விண்டோ’ நடைமுறை, கடந்த நவம்பர் 3 அன்று துவங்கியது. இதில், முதல் வீரராக மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ரொமாரியோ ஷெப்பர்டை, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுக் கொண்டது.
அணிகளுக்கு இந்த ‘ட்ரான்ஸ்பெர் விண்டோ’ நடைமுறையை பயன்படுத்த நவம்பர் 24 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால், எதிர்வரும் காலங்களில் இம்மாதிரி பல வீரர்கள் அணி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரராக ப்ரித்வி ஷாவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எந்த அணி யாரை விடுவிக்கப்போகிறது?
இதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகள், தங்கள் அணியில் தக்கவைத்துக்கொள்ள உள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்க உள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட பிசிசிஐ நவம்பர் 26 வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏலத்தில் ரூ.16.25 கோடி என்ற இமாலய விலைக்கு பென் ஸ்டோக்ஸை சென்னை அணி பெற்றது. ஆனால், காயம் காரணமாக அவரால் தொடர் முழுவதும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. அதேபோல, ஓய்வை அறிவித்த அம்பதி ராயுடுவும் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.
மற்றொரு எதிர்பாராத திருப்பமாக, கொல்கத்தா அணியில் இருந்து ஆன்ட்ரே ரசல் விடுவிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பேட்டிங் & பந்துவீச்சு என 2 பிரிவிலும், கொல்கத்தாவுக்கு ஒரு மிகப்பெரிய தூணாக திகழ்ந்த அவர் விடுவிக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, குஜராத் அணியிடம் இருந்து ரூ.10 கோடிக்கு பெற்ற லாக்கி பெர்குசனையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஹர்ஷல் பட்டேல், தினேஷ் கார்த்திக் ஆகியோரையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹாரி ப்ரூக், மயன்க் அகர்வால் ஆகியோரையும் விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரூ.10 கோடிக்கு லக்னோ அணியால் பெறப்பட்ட ஆவேஷ் கான் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும், தொடர்ந்து காயங்களால் பாதிக்கப்பட்டு தொடரிலேயே பங்கேற்க முடியாத நிலையில் உள்ள ஜோஃப்ரா ஆர்ச்சரை மும்பை அணி விடுவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, பஞ்சாப் கிங்ஸ் அணி ராகுல் சஹரையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜேசன் ஹோல்டரையும் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. Ben stokes set to be released csk ipl 2024
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை எச்சரிக்கை: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை எதிரொலி: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அவசர கடிதம்!