இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லத்தின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மவுங்கானுயில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16ம் தேதி தொடங்கியது.
இதன் மூன்றாம் நாளான இன்று (பிப்ரவரி 18) 2வது இன்னிங்ஸில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தின் ஸ்காட் குகெலிஜின் வீசிய 49வது ஓவரில், தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார்.
இதன் மூலம் நியூசிலாந்தின் அணியின் முன்னாள் வீரரும், தற்போது இங்கிலாந்தின் டெஸ்ட் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் பிரெண்டன் மெக்கல்லத்தின் சாதனையை முறியடித்துள்ளார்.
101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மெக்கலம் இதுவரை 107 சிக்ஸர்களை மட்டுமே அடித்துள்ளார்.
இந்நிலையில் தனது 90வது டெஸ்ட் போட்டிகளில் ஆடிவரும் பென் ஸ்டோக்ஸ் 109 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டி விவரம் :
டாஸ் வென்று நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 306 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
19 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 374 ரன்கள் குவித்து ஆல் ஆவுட் ஆனது இங்கிலாந்து அணி.
தொடர்ந்து 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து அணி.
எனினும் இங்கிலாந்து அணியின் அனுபவமிக்க பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நியூசிலாந்து அணியின் முன்னனி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
3ம் நாள் முடிவில் 63 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தத்தளித்து வரும் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 331 ரன்கள் தேவைப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
மின் இணைப்புடன் ஆதார் எண்: களமிறங்கிய மோசடி கும்பல் – உஷார் மக்களே உஷார்!
கர்நாடக பட்ஜெட் உரையில் மேகதாது அணை: வைகோ கண்டனம்!