மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக்கோப்பை தொடரில், துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல், இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதை தொடர்ந்து, கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பார்படாஸில் இருந்து நேரடியாக டெல்லி வந்த இந்திய அணிக்கு, பிரதமர் மோடி சிறப்பு விருது வழங்கினார். பிரதமர் மோடியிடம் கோப்பையை காட்டி, இந்திய வீரர்கள் வாழ்த்து பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்ற இந்திய அணி, புகழ்பெற்ற வான்கடே மைதானம் அமைந்துள்ள மரைன் டிரைவ் சாலையில் கோப்பையுடன் பேருந்து பேரணியில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.
அந்த பேரணியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ஆரவார வரவேற்பு வழங்கினர்.
இதற்கிடையில், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய்ஷா அறிவித்திருந்தார். இந்த ரூ.125 கோடி வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற 15 வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு, தலா ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பவுலிங் பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் ஆகியோருக்கு தலா ரூ.2.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
அதேபோல, இந்திய அணியின் 3 பிசியோதெரபிஸ்ட்கள், 3 த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட், 2 ஸ்ட்ரென்த் & கண்டிஷனிங் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.2 கோடி வழங்கப்பட உள்ளது.
அஜித் அகர்கர் தலைமையில் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள 5 பேருக்கும் தலா ரூ.1 கோடி வழங்கப்பட உள்ளது.
இவர்கள் மட்டுமின்றி, ரிசர்வ் வீரர்களாக இந்திய அணியுடன் பயணித்த சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகிய 4 பெரும் தலா ரூ.1 கோடி பெறவுள்ளனர்.
இவர்களுக்கு மட்டுமின்றி, இந்திய அணியுடன் பயணித்த அணியின் வீடியோ அனலிஸ்ட், பிசிசிஐ ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் ரூ.11 கோடி பரிசுத்தொகையாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, எம்.எஸ்.தோனி தலைமையில் இந்திய அணி 2013 சாம்பியன்ஸ் ட்ரோபி கோப்பையை வென்றபோது, ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசுத்தொகையும், பயிற்சியாளர்கள் உட்பட அணியுடன் பயணித்த ஊழியர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
அதேபோல, 2011 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபோது, ஒவ்வொரு வீரருக்கும் ரூ.2 கோடி பரிசுத்தொகையும், பயிச்சியாளர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
முன்னதாக, 2007 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபோது, மொத்தமாக ரூ.12 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
முதன்முதலில், கபில் தேவ் தலைமையில் இந்திய அணி 1983 உலகக்கோப்பையை வென்றபோது, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் போதுமான நிதி இல்லாததால், எந்த பரிசுத்தொகையும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நீட் வினாத்தாள் கசிவு … என்.டி.ஏ-வை கேள்விகளால் துளைத்த உச்ச நீதிமன்றம் : சிபிஐக்கு உத்தரவு!
வேலைவாய்ப்பு : தமிழ் வளர்ச்சித் துறையில் பணி!
கிராபெனின்-என்னும் நானோ மெட்டீரியல்
புதிய கிரிமினல் சட்டத்தில் திருத்தம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு… ஸ்டாலின் உத்தரவு!