இந்திய ஜெர்சியில் பாகிஸ்தான் லோகோ!

Published On:

| By Kumaresan M

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 9-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த தொடரில் இந்தியா ஆடும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.

வழக்கமாக ஐ.சி.சி. நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் போட்டியை நடத்தும் நாடுகளின் பெயர்கள் அணி வீரர்கள் அணியில் ஜெர்சியில் இடம் பெற்றிருக்கும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடந்த போது, பாகிஸ்தான் அணி இங்கு வந்து விளையாடியது. அப்போது, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வீரர்கள் அணிந்த ஜெர்சியில் இந்தியாவின் பெயரும் லோகோவும் இடம் பெற்றிருந்தது.

ஆனால், இந்தியா விளையாடும் போட்டியக் துபாயில் நடப்பதால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தான் பெயர் இந்திய வீரர்கள் ஜெர்சியில் இடம் பெறாது என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், பிசிசிஐ இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் ஷைகா கூறுகையில், “இந்திய அணி ஐ.சி.சி வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றும். பாகிஸ்தான் அணியின் பெயர் இந்திய ஜெர்சியில் இடம் பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறாவிட்டால் இந்திய அணி மீது கடும் நடவடிக்கை எடுக்க ஐ.சி.சியை வலியுறுத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு ‘ விதிமுறைகளின் படி, போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் மற்றும் லோகோ அணிகளின் ஜெர்சியில் இடம்பெற வேண்டும். விதியை மீறினால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். போட்டியின் சின்னத்தை நாட்டின் பெயரை தங்கள் ஜெர்சியில் சேர்ப்பது ஒவ்வொரு அணியினதும் பொறுப்பாகும் ‘எனவும் ஐசிசி தெரிவித்துள்ளதையடுத்து பிசிசிஐ முடிவை மாற்றியதாக தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share