மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் விளையாடவுள்ள சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 டி20 உலகக்கோப்பை நிறைவடைந்த பிறகு, 2024-25 சீசனில் வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்தியா vs வங்கதேசம்
முதலாவதாக வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த பயணத்தின்போது, இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதில் டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 அன்றும், டி20 தொடர் அக்டோபர் 6 அன்றும் துவங்கவுள்ளது.
முதல் டெஸ்ட் | செப்டம்பர் 19 – செப்டம்பர் 23 | சென்னை
2வது டெஸ்ட் | செப்டம்பர் 27 – அக்டோபர் 1 | கான்பூர்
முதல் டி20ஐ | அக்டோபர் 6 | தர்மசாலா
2வது டி20ஐ | அக்டோபர் 9 | டெல்லி
3வது டி20ஐ | அக்டோபர் 12 | ஐதராபாத்
இந்தியா vs நியூசிலாந்து
வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடர் முடிவடைந்த உடனேயே, அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட, நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 16 அன்று துவங்கவுள்ளது.
முதல் டெஸ்ட் | அக்டோபர் 16 – அக்டோபர் 20 | பெங்களூரு
2வது டெஸ்ட் | அக்டோபர் 24 – அக்டோபர் 28 | புனே
3வது டெஸ்ட் | நவம்பர் 1 – நவம்பர் 5 | மும்பை
இந்தியா vs இங்கிலாந்து
2025 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக, இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இவற்றில், டி20 தொடர் ஜனவரி 22 அன்றும், ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் துவங்கவுள்ளது.
முதல் டி20ஐ | ஜனவரி 22 | சென்னை
2வது டி20ஐ | ஜனவரி 25 | கொல்கத்தா
3வது டி20ஐ | ஜனவரி 28 | ராஜ்கோட்
4வது டி20ஐ | ஜனவரி 31 | பூனே
5வது டி20ஐ | பிப்ரவரி 2 | மும்பை
முதல் ஒருநாள் | பிப்ரவரி 6 | நாக்பூர்
2வது ஒருநாள் | பிப்ரவரி 9 | கட்டாக்
3வது ஒருநாள் | பிப்ரவரி 19 | அகமதாபாத்
இதற்கிடையில், ஜிம்பாப்வேவுக்கு ஜூலை மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளித்து, ரியான் பராக், மயன்க் யாதவ், நிதீஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ரஜத் படிதார், ப்ரப்சிம்ரன் சிங் என பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாத் நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து, 2024 நவம்பர், டிசம்பர் மற்றும் 2025 ஜனவரி ஆகிய மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதல்வர் வேண்டுகோள்… அதிமுகவினரை அழைத்த சபாநாயகர்… மறுத்த எடப்பாடி
கள்ளக்குறிச்சி மரணம் : சட்டசபையில் கடும் அமளி… அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!