நாளை பிசிசிஐ தலைவராகிறார் ரோஜர் பின்னி!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி, நாளை (அக்டோபர் 18) தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக கடந்த 2019ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும், செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தேர்வானார்கள். இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, இந்த பதவிகளுக்கான தேர்தல் நாளை (அக்டோபர் 18) மும்பையில் பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற இருக்கிறது.

இதில் புதிய தலைவராக 1983ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியில் பிரகாசித்த கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 67 வயதான ரோஜர் பின்னி, பிசிசிஐயின் 36வது தலைவராக நாளை தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

பிசிசிஐயின் செயலாளராக ஜெய் ஷாவே மீண்டும் தொடர உள்ளார். இவருடைய பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்க வழி செய்யும் வகையில், பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

அதுபோல் செளரவ் கங்குலியும் தன் பதவியைத் தொடர அனுமதி வழங்கியிருந்தது.

ஒருவர் பிசிசிஐ அல்லது மாநில கிரிக்கெட் சங்கத்தில் அல்லது இரண்டிலும் சேர்ந்து தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால்,

அடுத்த 3 ஆண்டுகள் இடைவெளி விட்டுத்தான் மீண்டும் ஏதேனும் நிர்வாகப் பொறுப்புக்கு வர முடியும். இதை வைத்தே பிசிசிஐ விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, கங்குலி, ஜெய்ஷா பதவியில் தொடர அனுமதி என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஆனால், பதவி நீட்டிப்பை எதிர்பார்த்த கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும் பிசிசிஐயின் துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சுக்லாவே நீடிக்க உள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர் பொருளாளராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் நெருங்கிய உதவியாளரான தேவஜித் சைகியா இணைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.

யார் இந்த ரோஜர் பின்னி
1979-87 வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரோஜர் பின்னி, அப்போட்டிகளில் 47 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார்.

அதேபோல், 1980-87 வரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார்.

அதிலும், முக்கியமாக 1983 உலகக் கோப்பையில் ரோஜர் பின்னி 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தினார்.

(சிறந்த பந்துவீச்சு 4-29) இதையடுத்து உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை ரோஜர் பின்னி படைத்தார்.

ஜெ.பிரகாஷ்

டி20 உலகக் கோப்பை: முதல் நாள் முடிவுகள்!

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *