2 இந்திய வீரர்களை வீட்டிற்கு கிளம்ப சொன்ன பிசிசிஐ!

Published On:

| By indhu

BCCI asked 2 Indian players to go home!

இந்திய அணியுடன் பயணம் செய்த சுப்மன் கில், ஆவேஷ் கான் ஆகிய 2 வீரர்களையும் இந்தியாவிற்கு செல்லுமாறு பிசிசிஐ அறிவுறுத்தி இருக்கிறது.

2024 டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது குரூப் சுற்றுப் போட்டிகளை அமெரிக்காவில் விளையாடி வருகிறது. அடுத்து சூப்பர் 8 சுற்று முழுவதும் வெஸ்ட் இண்டீஸ்-ல் நடைபெற இருப்பதால் இந்திய அணி அங்கு செல்ல உள்ளது.

அமெரிக்காவில் இந்திய அணியின் கடைசி போட்டியில் கனடா அணிக்கு எதிராக நாளை விளையாட உள்ளது. இந்த நிலையில் அணியில் இருக்கும் நான்கு மாற்று வீரர்களில் சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கானை மட்டும் இந்தியாவுக்கு செல்லுமாறு பிசிசிஐ அறிவுறித்தியுள்ளது.

மற்ற இரண்டு மாற்று வீரர்களான ரிங்கு சிங் மற்றும் கலீல் அஹ்மது இந்திய அணியுடன் தொடர்ந்து பயணம் செய்ய இருக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் 15 வீரர்கள் மட்டுமே இடம்பெற முடியும்.

எனினும், ஒவ்வொரு அணியும் கூடுதலாக சில மாற்று வீரர்களையும் சேர்த்து இந்த தொடருக்கு அறிவித்தது. இந்திய அணியும் நான்கு மாற்று வீரர்களை அறிவித்தது. அதற்கு காரணம், திடீரென ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரரை இந்தியாவில் இருந்து அமெரிக்கா அல்லது வெஸ்ட் இண்டீஸ்-க்கு ஒரே நாளில் அனுப்புவது என்பது நடக்காத காரியமாகும்.

அவருக்கு விசா வாங்கி, அதன் பின் பயணத்தை திட்டமிட்டு அமெரிக்கா அல்லது வெஸ்ட் இண்டீஸ் அனுப்ப வேண்டும். அதற்கு குறைந்தது 3 நாட்களாவது ஆகிவிடும்.

எனவே, கூடுதலாக 4 வீரர்களை அனுப்பி வைத்திருந்தது பிசிசிஐ. அதில் துவக்க வீரர் சுப்மன் கில் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் வெஸ்ட் இண்டீஸ்-ல் நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றுக்கு தேவை இல்லை என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தற்போது இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். மாற்று தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட 15 பேர் கொண்ட வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளார்.

எனவே, நான்காவது துவக்க வீரராக இருக்கும் சுப்மன் கில்லை இந்தியாவிற்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீஸ்-ல் உள்ள பிட்சுகள் அனைத்தும் மந்தமானவை என்பதால் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அங்கு அதிக வேலை இல்லை.

ஏற்கனவே, 15 பேர் கொண்ட அணியில் 3 வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஹர்திக் பாண்டியா 4வது வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற்றுள்ளார். மாற்று வீரர்களில் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது இருக்கிறார். எனவே, ஆவேஷ் கானை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘ஹமாரே பாரா’ படத்தை வெளியிட உச்சநீதிமன்றம் தடை – முஸ்லீம் தலைவர்கள் வரவேற்பு!

வயநாட்டில் போட்டியிடுகிறாரா பிரியங்கா காந்தி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel