பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று வங்கதேசம் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம் அணி.
இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியுடன், அந்த அணியை அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது.
இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அதே ராவல்பிண்டியில் தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, மெஹிடி ஹாசன் (5 விக்கெட்) பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி, பாகிஸ்தானின் குர்ரம் (6 விக்கெட்) பந்துவீச்சில் 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில் 7வது விக்கெட்டுக்கு இணைந்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ்(138) மற்றும் மெஹிதி ஹாசன்(78) இருவரும் ஜோடி சேர்ந்து 186 ரன்கள் குவித்து பாகிஸ்தானை கலங்கடித்தனர். முடிவில் அந்த அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
11 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு வங்கதேசத்தின் ஹாசன் மஹுமத் (5 விக்கெட்) மற்றும் நஹித் ரானா(4 விக்கெட்) சிம்மசொப்பனமாக விளங்கினர்.
இருவரின் பந்துவீச்சில் சிதறிய பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வரலாற்று வெற்றியை படைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய வங்கதேச வீரர்கள், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் குவித்து வெற்றியை பதிவு செய்தனர்.
இதன்மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த அணி என்ற வரலாற்று சாதனையையும் வங்கதேச அணி படைத்துள்ளது.
இந்த பிரம்மாண்ட வெற்றியின் மூலம் WTC புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது வங்கதேசம்.
அதேவேளையில் 5வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி இந்த மோசமான தோல்வியின் மூலம் WTC புள்ளிப்பட்டியலில் 8 இடத்திற்கு பின் தங்கியுள்ளது. இதன்மூலம் WTC பைனலுக்கான வாய்ப்பில் இருந்து முதல் அணியாக பாகிஸ்தான் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பெங்களூரு குண்டு வெடிப்பு… தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர் ஷோபா