வாழ்வா சாவா ஆட்டத்தில் வங்காள தேசம்… வரிந்துகட்டும் ஆப்கானிஸ்தான்…

விளையாட்டு

இன்றைய லீக் ஆட்டத்தில் தோற்றால் ஆசியக் கோப்பை தொடரிலிருந்து வெளியேற நேரிடும் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது வங்காள தேசம்.

ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரையிலான ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி மட்டுமே 3 புள்ளிகளுடன் சூப்பர் 4 எனப்படும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதே பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டம் மழையால் ரத்தானதால் 1 புள்ளி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதே வேளையில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கையும் வங்காளதேசம் தங்களது முதல் போட்டியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி மோதின. அதில் வங்காளதேச அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது.

நெருக்கடியில் வங்காள தேச அணி!

இதனையடுத்து அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்று (செப்டம்பர் 3) நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் வங்காள தேச அணி களமிறங்குகிறது.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (89 ரன்) தவிர யாரும் நிலைத்து நிற்கவில்லை. எனவே தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது நைம், தன்ஜித் ஹசன், கேப்டன் ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் எழுச்சி பெற வேண்டியது அவசியம்.

அதேபோன்று பந்து வீச்சில் ஷகிப் அல்-ஹசன், தஸ்கின் அகமது போல் ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோரும் விக்கெட் வேட்டையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

போராடும் ஆப்கானிஸ்தான் அணி!

ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி நடப்பு ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையோடு இன்று வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

அந்த அணி ஆசியக்கோப்பைக்கு முன்பு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தாலும், அதற்கு முன்பு நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

அந்த அணியின் பேட்டிங்கில் ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், நஜ்புல்லா ஜட்ரன், ஷஸ்மத்துல்லா ஷகிடியும், பந்து வீச்சில் ரஷித் கான், பைசல்லா பரூக்கி, முஜூப் ரகுமான், நூர் அகமதுவும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள்.

ஏறக்குறைய சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இரு அணிகள் இடையேயான ஆட்டம் பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

அதிபராக முயற்சிக்கும் மோடி: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *