பிரபல கிரிக்கெட் கிளப்பில் வீரர்களுக்கு சிக்சர் விளாச தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் 234 ஆண்டுகள் பழமைவாய்ந்த உள்ளூர் கிரிக்கெட் கிளப் என்ற பெருமையை சௌத்விக் அண்ட் ஷோர்ஹாம் கொண்டுள்ளது. இங்கு விளையாடுவதை அந்நாட்டு வீரர்கள் பெருமையாக கருதி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு விளையாடும்போது, வீரர்கள் விளாசும் சிக்ஸர்களால் மைதானத்திற்கு அருகே உள்ள தங்கள் வீட்டின் ஜன்னல், கார் கண்ணாடி ஆகியவை அடிக்கடி சேதம் அடைவதாக அக்கம் பக்கத்தினர் தொடர்ச்சியாக புகாரளித்து வந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட கிளப் நிர்வாகம் தான் வீரர்கள் சிக்சர்கள் விளாச தடை விதிக்கும் விதமாக புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, முதல் சிக்சர் அடித்தால் ரன் இல்ல என்றும், 2வது சிக்சர் அடித்தால் அவுட் என்றும் விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியால் அங்கு விளையாடும் வீரர்கள் மட்டுமின்றி, போட்டியை காண வரும் பார்வையாளர்களிடம் கூட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“சிக்ஸருக்கு அடிப்பது கிரிக்கெட் விளையாட்டின் பெருமையின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. அதை எப்படி தடை செய்வது? கேலிக்குரியது. இந்த புதிய விதிமுறை விளையாட்டின் உயிரோட்டத்தை குறைக்கிறது என கிளப்பின் முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
’கிரிக்கெட் போட்டியை ஆவலுடன் காண வரும் எனனை பொறுத்தவரை, சிக்ஸர்களை தடை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை” என உள்ளூர் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகமே அதிரடியாக பந்துக்கு பந்து விளாசப்படும் டி20, டி10 போட்டிக்கு தயாராகிவிட்ட நிலையில், சௌத்விக் கிளப்பில் சிக்சர் விளாச தடை விதிக்கப்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா