ஆஸ்திரேலியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு இளம் கிரிக்கெட் வீரரான பில் ஹியூக்ஸ் கிரிக்கெட் பந்து தாக்கி மைதானத்திலேயே உயிரிழந்தார். தற்போது, அதே ஆஸ்திரேலியாவில் நடுவர் ஒருவர் கிரிக்கெட் பந்து முகத்தை தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் நடுவராக டோனி டெனோபிரெகா என்பவர் பணியாற்றினார். அப்போது, பேட்ஸ்மேன் ஸ்டெரெயிட் டிரைவில் அடித்த பந்து மின்னல் வேகத்தில் நடுவரின் முகத்தில் தாக்கியது. இதில், நிலைகுலைந்து போன அவர் மைதானத்தில் மயங்கி விழுந்தார். முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.
உடனடியாக, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் எலும்பு எதுவும் நொறுங்கவில்லை. ஆனாலும், சிறிய அறுவை சிகிச்சை நடத்த வேண்டியது இருக்கும் என தெரிகிறது. அறுவை சிகிச்சை செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நடுவர்கள் சங்கம் , டோனி விரைவில் குணமடைந்து வருவார் என்று தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் தொடரில் ஒரு ஆட்டத்தில் நடுவராக பணியாற்றிய ஜெரார்ட் அபூத் ஹெல்மட் அணிந்து பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல மற்றொரு ஆஸ்திரேலிய நடுவரான ப்ரூஸ் ஆக்ஸன் போர்டும், இதே போன்று பாதுகாப்பு கவசங்களை அணிந்து பணியாற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
எனவே, கிரிக்கெட் போன்ற ஆட்டங்களில் நடுவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பிரத்யேகமாக நவீன வகையில் ஹெல்மட் தயாரிக்க ஐ.சி.சி முடிவெடுக்க வேண்டுமென்றும் பரவலான கோரிக்கை எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
காஸா : பாசிமணிகள், உயில், இனக்கொலை!
விசிக மீது திட்டமிட்டு அவதூறு… தொண்டர்களுக்கு திருமா அட்வைஸ்!